டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி..!
டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகளில் ஆம்ஆத்மி கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 126 இடங்களை விட கூடுதலான வார்டுகளில் வெற்றி பெற்று, 15 ஆண்டுகளாக பாஜகவிடம் இருந்த மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
தலைநகர் டெல்லியில் 3 மாநகராட்சிகளும், மொத்தம் 272 வார்டுகளும் இருந்தன. இந்நிலையில் 3 மாநகராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. அதன்படி வார்டுகளும் 250 ஆக சுருக்கப்பட்டன. இந்த நிலையில், 250 வார்டுகளுக்கான டில்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. அதில், 50.47 சதவீத ஓட்டுகளே பதிவானது.
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை இன்று (டிச.7-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்தில், பாஜக சற்று முன்னிலை வகித்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முந்திச் சென்றது.
மதியம் 2 மணி நிலவரப்படி 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 126 வார்டுகளில் வெற்றியும், 8 வார்டுகளில் முன்னிலையிலும் உள்ளது. பாஜக 97 வார்டுகளில் வெற்றியும், 6 வார்டுகளில் முன்னிலையிலும் இருந்தது.காங்கிரஸ் 7 வார்டுகளில் வெற்றியும், 3 வார்டுகளில் முன்னிலையிலும் இருந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தனர்.
பெரும்பான்மைக்கு தேவையான 126 இடங்களை விட ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் டெல்லி மாநகராட்சியை அக்கட்சி கைப்பற்றியுள்ளது. இதன்மூலம், கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியை தன்வசம் வைத்திருந்த பாஜகவிடம் இருந்து ஆம் ஆத்மி முதன்முறையாக கைப்பற்றியது. டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியதை தொடர்ந்து, டெல்லி முழுவதும் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.