டி.என்.ஏ. பரிசோதனை மூலம் தன்னை கொச்சைப்படுத்த முயல்வதாக ஸ்ரீமதியின் தாய் ஆவேசம்..!!
கடந்த ஜூலை 13ம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் வன்முறையில் வெடித்து அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது. மகளின் மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்கப்போவதில்லை என போராட்டத்தில் குதித்த பெற்றோரை அப்போதே நீதிமன்றம் கண்டித்தது. மகளின் உடலை வைத்துக் கொண்டு பந்தயம் கட்டுகிறீர்களா? என நீதிமன்றம் அப்போது கேள்வி எழுப்பியது. இதனிடையே மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் கடலூரில் நடந்த அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16வது மாநில மாநாட்டில் ஸ்ரீமதியின் தாயார் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதிக்காக போராடிய தாய் செல்வியை பாராட்டி கௌரவித்ததோடு, ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதி கேட்டு கோஷம் எழுப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கண்ணீருடன் பேச்சை தொடங்கிய செல்வி, தனது மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்க மாதர் சங்கம் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வி, தனது மகள் உயிரிழந்த விவகாரத்தை சிபிசிஐடி போலீசார் விசாரிப்பது சரியாக இல்லை என்றும் தனக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். டி.என்.ஏ சோதனை மூலம் தன்னை கொச்சைப்படுத்த முயல்வதாகவும் செல்வி குற்றஞ்சாட்டினார்.