டாஸ்மாக்கில் மதுவாங்கி குடித்தவர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்..!!
தஞ்சாவூர் கீழவாசல் மீன் மார்க்கெட் எதிரில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்று கிழமை என்பதால் மீன் வியாபாரம் அதிக அளவில் நடைபெற்று வந்த நிலையில், டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே கடையின் அருகே இருந்த மதுபான பாரில் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதனை வாங்கி குடித்த மீன் வியாபாரி 68 வயது குப்புசாமி என்ற முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். மேலும் விவேக் என்ற 36 வயது இளைஞர் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.
தஞ்சையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவில் சயனைடு கலந்திருப்பது உடல்கூறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மது மாதிரியில் சயனைடு கலந்திருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இருவரையும் கொலை செய்யும் நோக்கில் மதுவில் சயனைடு கலக்கப்பட்டதா அல்லது தற்கொலைக்கு முயன்றார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் பூதாகரமாகியிருக்கும் நிலையில், தற்போது பாரில் அருந்திய மதுவில் சயனைடு இருந்தது பெரும் பரபரப்பையும், எதிர்க்கட்சிகளினரிடையே கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.