சோகம்.. பிரபல தமிழ் இயக்குநர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!
தமிழ்த் திரைப்பட் இயக்குநரும், வானொலி விளம்பரங்கள் மூலம் புகழ் பெற்றவருமான எஸ்.வி.ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
1930 முதல் 1940 வரையிலான காலகட்டங்களில் தமிழ்த் திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் கே.சுப்ரமணியன். இவருடைய மகன் எஸ்.வி.ரமணன். இவர், நாடகக் கலைஞராக தனது கலை வாழ்க்கையைத் தொடங்கினார்.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சில நாடகங்களையும், ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார். அத்துடன், அகில இந்திய வானொலியில் விளம்பரங்களுக்கு குரல் கொடுத்ததன் மூலம் கூடுதல் கவனம் பெற்றார். ரத்னா ஃபேன் ஹவுஸ் விளம்பரத்தில் ஒலிக்கும் இவருடைய குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.
1983-ம் ஆண்டு ஒய். ஜி.மகேந்திரன் - சுஹாசினி நடித்த 'உறவுகள் மாறலாம்' என்ற படத்தை இயக்கினார். மேலும், அதற்கு கதை எழுதி இசையமைத்தார். அந்தப் படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகிய பிரபலங்கள் கெளரவ வேடங்களில் நடித்தனர்.
எஸ்.வி.ரமணின் சகோதரி டாக்டர் பத்மா சுப்ரமணியம் பிரபலமான பரத நாட்டிய நடனக் கலைஞர். அதேபோல் அவரது சகோதரர் அபஸ்வரம் ராம்ஜி புகழ்பெற்ற இசைக் கலைஞர். இன்று தமிழ்த் திரையுலகையே தனது இசையால் கலக்கிவரும் அனிருத், மறைந்த எஸ்.வி ரமணனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை ஆர்.ஏ.புரம் இல்லத்தில் வசித்து வந்த எஸ்.வி. ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று (செப்.26) அதிகாலை உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எஸ்.வி.ரமணின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.