சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. களைகட்டப் போகுது தீவுத் திடல்..!
சென்னை தீவுத் திடலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் அரசு தொழில் பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். இதில், மத்திய - மாநில அரசு துறைகளின் அரங்குகள், ஸ்டால்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறும். சிறுவர்களை கவரும் பல்வேறு வகையான விளையாட்டுகள், உணவு வகைகள் பொருட்காட்சியில் அங்கம் வகிக்கும்.
இதனால், சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதி மக்களும் அதிக அளவில் இங்கு படையெடுப்பது வழக்கம். அத்துடன், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பொங்கல் விடுமுறை காலங்களில் அரசு பொருட்காட்சி நடைபெறுவதால் குடும்பத்தோடு வருவார்கள்.
அந்தவகையில், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி பொருட்காட்சி தொடங்கி நடைபெற்றது. அதன் பிறகு, கொரோனா தொற்று பரவல், ஊரடங்கு போன்ற காரணங்களால் கடந்த 2 வருடங்களாக அரசு பொருட்காட்சி நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பொருட்காட்சியை நடத்துவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொருட்காட்சியை நடத்த திட்டமிட்டு, அதற்கான டெண்டர் விடும் பணி போன்றவற்றை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.