சசிகலா மீது விசாரணை நடத்தணும்.. வலியுறுத்துகிறார் ஜெ.தீபா..!
ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் சசிகலா மீதுதான் முதல் குற்றம் கூறப்பட்டிருக்கிறது. எனவே, அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, ஜெ.தீபா கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அவருடைய அண்ணன் மகள் ஜெ.தீபா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுகவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனாலும் பிளவு என்பது அதிமுகவுக்கு புதிதல்ல. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுகவில் நல்ல தலைமை இல்லை என்பதால் இந்த பிளவு இருக்கிறது.
சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இப்போது அதிமுக கட்சியாக அல்ல, ஒரு அமைப்பாக கூட இல்லை என்றுதான் சொல்வேன். அதிமுகவை வழிநடத்த இப்போது யாருமில்லை.
எனக்கு ஒட்டுமொத்த அரசியலே பிடிக்கவில்லை. எனவே, நான் அரசியலில் இருந்து விலகிவிட்டேன். ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் சசிகலா மீதுதான் முதல் குற்றம் கூறப்பட்டிருக்கிறது. எனவே, அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.