கொடுத்த கடனையா கேக்குற..! பெண்ணை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்..!
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே காலடி பகுதியைச் சேர்ந்தவர் சனில். இவரது மனைவி ஆதிரா (26). அங்கமாலி என்ற இடத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். அதே சூப்பர் மார்க்கெட்டில் அகில் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி காலை வேலைக்கு சென்ற ஆதிரா அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது கணவர் சனில் காலடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனாலும் கடந்த 5 நாட்களாக ஆதிரா குறித்த எந்த விவரங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தீவிர விசாரணையில் சக ஊழியரான அகிலுடன், ஆதிரா காரில் சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அகில் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அகிலை பிடித்து கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆதிராவை அகில் கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது, ஆதிராவிடம் இருந்து அகில் பல முறை நகை மற்றும் பணத்தை கடனாக வாங்கி இருக்கிறார். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதிரா கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு உள்ளார்.
இது அகிலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி கடந்த 29-ம் தேதி பணத்தை திருப்பித் தருவதாக கூறி, அகில் தனது காரில் ஆதிராவை அழைத்துச் சென்று உள்ளார். அதன்படி திருச்சூர் அருகே ஆதிரப்பள்ளி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார்.
அங்கு வைத்து திடீரென அவரது சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து உள்ளார். இதனால் துடிதுடித்த ஆதிரா மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார். அதன் பிறகு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வன பகுதிக்குள் பல்வேறு பகுதிகளில் வீசி உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
விசாரணைக்கு பிறகு போலீசார் அகிலை கைது செய்தனர். தொடர்ந்து நேற்று காலை ஆதிரப்பள்ளி வனப்பகுதிக்கு அகிலை போலீசார் அழைத்து சென்றனர். அப்போது அங்கு வீசப்பட்ட ஆதிராவின் உடல் பாகங்களை போலீசார் கண்டெடுத்தனர். இளம்பெண்ணை கொன்று உடலை துண்டு துண்டுகளாக வெட்டி பாகங்களை காட்டில் வீசிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.