குமரி அனந்தனுக்கு அரசு வீடு.. அரசாணை வழங்கினார் முதல்வர்..!
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம், குமரி மங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில், சுதந்திரப் போராட்ட தியாகி அரி கிருட்டிணன்-தங்கம்மாள் தம்பதியின் முதல் மகனாக 1933 மார்ச் 19-ம் தேதி பிறந்தவர் குமரி அனந்தன்.
பெருந்தலைவர் காமராஜரின் அருமந்த சீடரும், காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமான குமரி அனந்தன், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் அரும் பணியாற்றியவர்.
தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்து வரும் அவர், தான் வாழ்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.
அவருடைய கோரிக்கையை கனிவுடன் ஏற்று, அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின், குமரி அனந்தனிடம் வழங்கினார்.