கிம் ஜாங் உன் குறித்து கூகுளில் தேடிய அதிகாரி... மரண தண்டனை விதித்த அதிபர்!!
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அணு ஆயுத ஏவுகணை சோதனை மூலம் வடகொரியா அச்சுறுத்தி வருகிறது. வெளிநாட்டு சினிமாக்களுக்கு தடை, தொலைக்காட்சிகளுக்கு தடை என பெரும் சர்வாதிகார ஆட்சியே நடக்கிறது. விதிகளை மீறினால் மிக கடுமையான தண்டனை விதிக்கப்படும்.
வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். அவரது தந்தை கிம் ஜோங் 2 மறைவுக்குப் பிறகு கடந்த 2011-ம் ஆண்டில் புதிய அதிபராக பொறுப்பு ஏற்றார் கிம் ஜாங் உன். அவரின் தந்தை போன்றே இவரும் கம்யூனிச அரசை நிர்வகித்து வருகிறார். அதனால் தன்னை எதிர்ப்பவர்களையும், அரசுக்கு எதிராக சதி செய்பவர்களையும் தண்டிக்கும் வகையில் மரணத் தண்டனை விதித்து வருகிறார்.
கிழக்காசிய நாடான வட கொரியாவில் வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடை உள்ளது. அதுபோல, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை பற்றிய செய்திகளும் வெளியுலகுக்கு தெரியாது. இதற்காக, வட கொரியாவில், இணையதளம் பயன்படுத்த, பல கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்நிலையில், ‘பியூரோ 10’ என்றழைக்கப்படும், அந்த நாட்டின் உளவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், கூகுள் இணையதளத்தில் சமீபத்தில், அதிபர் கிம் ஜாங் உன் குறித்த தகவல்களை விவரமாக தேடியுள்ளார். இதனை எப்படியோ அறிந்து கொண்ட கிம் ஜாங் உன் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். துப்பாக்கியால் சுடும் படைப் பிரிவினரால், அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இது, அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.