கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி வெளிப்படையான கடிதம்..!!
கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், என் மீது நீங்கள் எப்போதும் அன்பும், பாசமழையும் பொழிந்தீர்கள். அது எனக்கான ஒரு தெய்வீக ஆசீர்வாதம் போன்று நான் உணர்ந்தேன். நமது பேரமுத காலத்தில், இந்தியர்களாகிய நாம், நம்முடைய அன்பிற்குரிய நாட்டை ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவதற்கான நோக்கங்களை நாம் கொண்டிருக்கிறோம்.
கடிதத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து, 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. நம்முடைய அடுத்த இலக்கு டாப் 3-க்குள் வரவேண்டும். இதற்கு, ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரத்தில் விரைவாக கர்நாடகா வளரும்போதே, அது சாத்தியப்படும். கொரோனா பெருந்தொற்று காலத்தில், பா.ஜ.க. அரசின் கீழ், வருடத்திற்கு அந்நிய முதலீடாக ரூ.90 ஆயிரம் கோடி கர்நாடகாவுக்கு கிடைத்தது. ஆனால், அதற்கு முந்தின அரசாங்கத்தின் கீழ் அது ரூ.30 ஆயிரம் கோடியாகவே இருந்தது. கர்நாடகாவை முதலீடு, தொழிற்சாலை மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் நம்பர் ஒன்னாக உருவாக்குவதுடன், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் ஆகியவற்றிலும் நம்பர் ஒன்னாக உருவாக்க நாங்கள் விரும்புகிறோம் என அவர் கடிதத்தில் சுட்டி காட்டி உள்ளார்.
இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய நாளில் பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோள், தேர்தல் விதிமீறல் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறும் செயல் என்று தெரிவித்ததோடு, காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் (கர்நாடகா பொறுப்பு) ரன்தீப் சுர்ஜேவாலா தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததற்காக, அவர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். சட்டங்கள் பிரதமருக்கு பொருந்துமா இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.