கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் வார்த்தைகளில் சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்..!!
வருகிற 10ம் தேதி கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. நாளுக்கு நாள் அனல் பறக்கும் பரப்புரையால், தலைவர்கள் வருகை மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் என கர்நாடக தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பாஜக நேற்று முன் தினம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள், இலவச பால், ரேஷன் கடைகளில் 5 கிலோ சிறுதானியங்கள் வழங்கப்படும் என அசத்தலான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. இதேபோல் நேற்று கர்நாடக காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்; அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3,000 நிதி உதவி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், விவசாய கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தரம் தாழ்ந்த முறையில் விமர்சனங்கள் வைக்கப்படுவதை தீவிர கவனத்தில் கொண்டுள்ளோம். முறையற்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து பெற்றவர்கள் அப்படி பேசுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பான புகார்களும், எதிர் புகார்களும் ஊடகங்களில் எதிர்மறையான கவனத்தை பெற்றுள்ளன. ஆகவே, அரசியல் கட்சிகளும், நட்சத்திர பேச்சாளர்களும் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் கவனமாக செயல்பட வேண்டும். வார்த்தைகளில் சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். சுமூகமான தேர்தல் சூழ்நிலையை சீர்குலைத்துவிடக்கூடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.