ஓபிஎஸ் ஆளுநர் ஆனால் அதிமுகவுக்கு தொல்லை நீங்கும்: சொல்கிறார் ராஜன் செல்லப்பா..!
பாஜகவுடன் தொடர்பில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வம், மணிப்பூர், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஆளுநர் பதவியை வாங்கிக் கொண்டு போய் விட்டால் அதிமுகவுக்கு தொல்லை நீங்கும் என்று, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறினார்.
மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில், திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேசியதாவது; "திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பால் விலை, மின்சார கட்டணம் 53 சதவீதமும், வீட்டு வரி 100 சதவீதம் ஏற்றி விட்டார்கள்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது மகன் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறார். மேலும் அவர் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் பதவி பெற போகிறார். இதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்..?.
மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு அடைந்திருக்கும் போது முதல்வர் மகனுக்கு மகுடம் சூட்ட அவசரம் ஏன்..?. செங்கலை தூக்கிக் காட்டிய உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவாரா, ஜெயலலிதா கொண்டு வந்த மினி கிளினிக்கை கொண்டு வருவாரா, பெண்களுக்கான மிக்சி, கிரைண்டர் கொடுக்கப் போகிறாரா..?.
பாஜகவுடன் தொடர்பில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வம், மணிப்பூர், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஆளுநர் பதவியை வாங்கிக் கொண்டு போய் விட்டால் அதிமுகவுக்கு தொல்லை நீங்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்" என்று அவர் கூறினார்.