ஓசி பயணம் செய்ய மாட்டேன்.. கண்டக்டருடன் மல்லுகட்டிய மூதாட்டி..!
"திமுக ஆட்சியில் பெண்கள் அனைவரும் ஓசியில் பயணம் செய்கின்றனர்" என அமைச்சர் பொன்முடி கூறியிருந்த நிலையில், அரசு பஸ்சில் ஏறிய மூதாட்டி ஒருவர் 'ஓசி பயணம் செய்ய மாட்டேன்' எனக்கூறி கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததும், குறிப்பிட்ட அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசும் போது, "திமுக ஆட்சியில் பெண்கள் அனைவரும் ஓசியில் பயணம் செய்கின்றனர்" என்று கூறினார். இதற்கு, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பெண்கள் மத்தியிலும் அதிருப்தி ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோவை மாவட்டம் மதுக்கரையில் இருந்து பாலக்கரை நோக்கி சென்ற பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் அரசுப் பேருந்தில் மூதாட்டி ஒருவர் ஏறினார். அவரிடம் நடத்துநர் இலவச டிக்கெட்டை கொடுத்தார். ஆனால், மூதாட்டி பணம் கொடுத்தார். அதனை வாங்க நடத்துநர் மறுத்துவிட்டார்.
இதனால் கோபமடைந்த மூதாட்டி, நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காசு வாங்காவிட்டால் டிக்கெட் வாங்க மாட்டேன் என திரும்பத் திரும்ப கூறினார். தமிழகமே இலவசமாக பயணம் செய்தாலும் நான் காசு கொடுக்காமல் பயணிக்க மாட்டேன் என உறுதிபட தெரிவித்தார். காசை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுக்குமாறு தெரிவித்தார்.
ஆனால், காசு வாங்க முடியாது என தெரிவித்த நடத்துநர், வேண்டுமனால் இறங்கி செல்லுமாறு கூறினார். ஆனாலும் தன் முடிவில் உறுதியாக இருந்த மூதாட்டி, பணத்தை கொடுத்து டிக்கெட் பெற்றதுடன், மீதி சில்லறையையும் வாங்கினார்.
இதனை அங்கிருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். அது வைரலாக பரவியது. இந்த மூதாட்டி யார், எப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் தெரியவில்லை.