ஒருமித்த உடலுறவு போக்சோவின் கீழ் வராது.. ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!
போக்சோ சட்டம் என்பது குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாக்கவே. இருதரப்பு சம்மதத்துடன் நடக்கும் உடலுறவை குற்றமாக்குவதற்கு போக்சோ சட்டம் அல்ல என்று, டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக கடந்த 2021-ம் ஆண்டு போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டது. 18 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இந்த சட்டத்தின் வரையறைக்குள் வருவர்.
இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அவருடைய குடும்பத்தினரால் ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால், அந்த நபருடன் சிறுமி இருக்க விரும்பவில்லை.இதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம், அந்த சிறுமி தான் காதலித்து வந்த தன்னுடைய ஆண் நண்பர் வீட்டிற்கு வந்தார்.
அவர், சிறுமியை பஞ்சாப் அழைத்துச் சென்றார். அங்கு, அந்த 17 வயது சிறுமியை மணந்தார். இந்த தம்பதிக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் போலீஸ் பாதுகாப்பு வழங்கியது. இந்நிலையில், அவர் 17 வயது சிறுமியை மணந்ததை குறிப்பிட்டு, சிறுமியின் பெற்றோர் டெல்லி போலீசில் புகார் அளித்தனர். உடனே அந்த நபர் கைது செய்யப்பட்டு, 2021 டிசம்பர் முதல் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அந்த நபர் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜஸ்மீத் சிங், சிறுமியின் வாக்குமூலத்தை கேட்டறிந்தார். அப்போது, தான் சொந்த விருப்பத்தின் பெயரில் தான் அந்த இளைஞனை திருமணம் செய்து கொண்டேன் என சிறுமி கூறினார். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதையும் அந்த சிறுமி நீதிபதியிடம் கூறினார்.
இதை தொடர்ந்து கோர்ட் உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: 'அந்த பெண் தனது சுதந்திர விருப்பத்தின் பேரில் அந்த நபரை திருமணம் செய்து கொண்டார். எந்த விதமான செல்வாக்கு, அச்சுறுத்தல், அழுத்தம் அல்லது வற்புறுத்தலின்றி அந்த பெண் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரை திருமணம் செய்து கொண்டார். அந்த சிறுமியே தான் அந்த நபரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.
இது, இருவருக்கும் இடையேயான காதல் உறவு என்பது தெளிவாகிறது. அவர்களுக்கு இடையேயான பாலியல் உறவானது இருவரின் முழு சம்மதத்துடன் நடந்தது தெளிவாகிறது. பாதிக்கப்பட்டவர் மைனர், எனவே, அவர் உடலுறவுக்குச் சம்மதம் தெரிவிப்பது சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படாது என்றாலும், அந்த சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அது சம்மதத்துடன் நடந்து உறவு என்பது தெளிவாகவே தெரிகிறது.
ஆகவே, பாதிக்கப்பட்ட பெண்ணின் அறிக்கையை புறக்கணித்து, குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைக்க வைப்பது விபரீதமான நீதியாகிவிடும். ஒருமித்த உடலுறவு போக்சோவின் கீழ் வராது. போக்சோ சட்டம் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாக்கும். இருதரப்பு சம்மதத்துடன் நடக்கும் உடலுறவை குற்றமாக்குவதற்கு போக்சோ சட்டம் அல்ல' என்று நீதிபதி குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து, தனது 17 வயது மகளை கடத்தி திருமணம் செய்ததாக சிறுமியின் தந்தை தாக்கல் செய்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.