1. Home
  2. தமிழ்நாடு

ஏரியில் மூழ்கி பலியான ஐடிஐ மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகை..!!

ஏரியில் மூழ்கி பலியான ஐடிஐ மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகை..!!

சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் பழங்குடியின மக்களுக்காக அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிலையத்தில் தர்மபுரி மாவட்டம் அரூர் சித்தேரி பகுதியைச் சேர்ந்த வேடன் என்பவரின் மகன் பிரவீன்குமார் (18) படித்து வந்தார். இவர் பயிற்சி நிலையம் அருகே உள்ள அரசினர் மாணவர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் மாணவர் பிரவீன் குமார், விடுதி நண்பர்களுடன் அரசு பயிற்சி நிலையத்தின் பின்புறத்தில் உள்ள பெருஞ்சூர் ஏரியில் குளிக்க சென்றார். அப்போது மாணவர் பிரவீன் குமார் ஏரியில் உள்ள நீரின் ஆழம் தெரியாமல் உள்ளே இறங்கி புதைமணலில் சிக்கிக்கொண்டு காப்பாற்றுமாறு கையை உயர்த்தி உள்ளார். ஆனால் அவர் விளையாட்டாக கையை காட்டுவதாக அவரது நண்பர்கள் நினைத்துள்ளனர். ஆனால் மாணவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.


ஏரியில் மூழ்கி பலியான ஐடிஐ மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகை..!!


இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமந்துறை தீயணைப்பு படை வீரர்கள் ஏரியில் மூழ்கிய மாணவரின் உடலை மீட்டனர். தகவலின் பேரில் விரைந்து வந்த கருமந்துறை போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்து கருமந்துறைக்கு வந்த பிரவீன் குமாரின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவரின் மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பிறகு மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் மாணவர் விடுதியில் தங்கியிருக்கும் போது எவ்வாறு விடுதியை விட்டு வெளியே வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like