ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மின்வாரியம் அதிரடி அறிவிப்பு..!
மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தியுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயரும்போது அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க, தனது ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை ஆண்டுக்கு இரண்டு முறை மாநில அரசு உயர்த்தி வருகிறது.
அந்த வகையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 31 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது, மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி 34 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஜூலை 1-ம் தேதி முதல் இந்த அகவிலைப்படி அமல்படுத்தப்படும். செப்டம்பர் 2022 மாதத்திற்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி இம்மாதத்தின் ஊதியத்துடன் இணைத்து அக்டோபர் மாதம் பணமில்லா பரிவர்த்தனை முறையான தீர்வு சேவை மூலம் வழங்கப்படும்.
மேலும், அனுமதிக்கத்தக்க உயர்த்தப்பட்ட அகவிலைப்படியைக் கணக்கிட அடிப்படை ஊதியத்துடன் தனிப்பட்ட ஊதியத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். திருத்தப்பட்ட அகவிலைப்படியைக் கணக்கிடுகையில் ஒரு ரூபாய்க்கும் குறைவாக வரக்கூடிய தொகை, அதாவது 50 காசும் அதற்கு மேல் இருக்குமாயின் அதனை அடுத்த ஒரு ரூபாயாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதுவே, 50 காசுக்கு குறைவாக இருந்தால் அதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அறிவிக்கப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி தற்போது அகவிலைப்படி பெறும் முழுநேர பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் மற்றும் திருத்தப்பட்ட ஊதிய விகிதம் ரூ.4,100 முதல் 12,500 பெறும் பணியாளர்களுக்கும் அனுமதிக்கத்தக்கது' என்று கூறப்பட்டுள்ளது.