ஊதியம் கேட்ட வடமாநில தொழிலாளர் மீது கொலைவெறி தாக்குதல்!!
4 மாதம் ஊதியம் வராததால் அதனை கேட்ட வடமாநில தொழிலாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பையனூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் அங்கு பணிபுரிந்து வருகின்றனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த கட்டுமான நிறுவன ஒப்பந்தம் மூலம் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இங்கு பணியாற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளிமாநில தொழிலாளர் ஒருவர் ஒப்பந்த நிறுவனத்தின் தலைமை நிலையத்திற்கு புகார் அனுப்பி இருந்தார். இந்தப் புகார் குறித்து தகவல் அறிந்த பையனூர் மனித வளத்துறை அதிகாரி கடும் ஆத்திரம் அடைந்தார்.
அவர் புகார் கூறிய தொழிலாளியை கொடுமையாக தாக்கியுள்ளார். புலம்பெயர் தொழிலாளர், காலை பிடித்து கெஞ்சியும் அவர் நிறுத்தவில்லை. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தங்கள் மாநிலங்களில் போதிய வருவாய் இல்லை என்றுதான் வெளிமாநில தொழிலாளர்கள் பிழைப்பு தேடி வளர்ந்து மாநிலங்களுக்கு வருகின்றனர். அப்படி வருபவர்களுக்கு ஊதியமும் தராமல் இப்படி தாக்குவது நியாயமற்றது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
newstm.in