உங்கள் வீட்டிலும் பயன்படுத்தாத லேப்டாப்கள் இருந்தால் என்னிடம் கொடுங்கள் - தமிழிசை.!!
தெலுங்கானா, பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பழனியில் நடைபெற்ற லயன்ஸ் கிளப் ஒன்றில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
லயன்ஸ் கிளப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் பேசியதாவது. “நான் விழுந்துவிழுந்து வேலை செய்தால் தொலைக்காட்சியில் வராது. ஆனால் நான் கீழே விழுந்தால் அது பெரிய செய்தியாக தொலைக்காட்சிகளில் வருகிறது. கீழே விழுவது என்பது இயல்பான ஒன்று. நன்மைகளை செய்ய ஆரம்பித்தால் நாட்டிற்கு ஆளுநரும், ஆட்டிற்கு தாடியும் எதற்கு என பேச ஆரம்பித்து விடுவார்கள்.
தெலங்கானாவில் ஏழை மாணவன் ஒருவன், என்னை தொடர்பு கொண்டு தனக்கு லேப்டாப் இல்லாததால் படிக்க முடியவில்லை என்றார். அதனால் தான் தனது சொந்த செலவில் லேப்டாப் ஒன்றை அந்த மாணவனுக்கு வாங்கி கொடுத்தேன். அதன்பின் சில நாட்களுக்கு பின் பேசிய அந்த மாணவன், லேப்டாப் மூலம் நன்கு படித்து, நல்ல மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறினார். எனவே உங்கள் வீட்டிலும் பயன்படுத்தாத லேப்டாப்கள் இருந்தால் அதனை தன்னிடம் கொண்டுவந்து கொடுங்கள். ஆளுநராக இருப்பதால் பல நன்மைகளை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுபோன்று சேவை செய்வது மன நிம்மதியை அளிக்கிறது” எனக் கூறினார்.