இன்று இந்திய விமானப்படை தினம் - பிரதமர் மோடி வாழ்த்து..!!
1932 அக்., 8ல் ஆங்கிலேயரால் இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டது. இந்நாளை நினைவுபடுத்தும் விதமாக அக்.,8ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திரம் பெறுவதற்கு முன் இரண்டாம் உலகப்போரில் இந்திய விமானப்படை ஈடுபட்டது. 1947ல் சுதந்திரம் பெற்ற பின், நான்கு முறை பாகிஸ்தானுடனும், ஒருமுறை சீனாவுடனும் இந்தியா போரில் ஈடுபட்டது.
இப்போர்களில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றியது. இயற்கை பேரழிவுகளின் போது, ஆபத்தான இடங்களில் இருந்து மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபடுகிறது. ஐ.நா., வின் அமைதிப்படையிலும் விமானப்படை இடம் பெற்றுள்ளது.இந்திய விமானப்படையில் 1,40,000 வீரர்கள் பணி புரிகின்றனர். 1720க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 90-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், விமானப்படை தினத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விமானப்படை தினத்தில் துணிச்சலான விமானப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள்.
இந்திய விமானப்படை பல தசாப்தங்களாக விதிவிலக்கான திறமையை வெளிப்படுத்தி வருகிறது. அவர்கள் தேசத்தைப் பாதுகாத்துள்ளனர் மற்றும் பேரழிவுகளின் போது குறிப்பிடத்தக்க பணிகளைக் காட்டியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.