இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீரில் லோசன நிலநடுக்கம்...!!
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் கடந்த 6-ம் தேதி அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 புள்ளிகள் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது.
இரு நாடுகளிலும் மொத்தம் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் கூட பலபேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என கூறப்படுவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க இந்தியாவிலும் சில நகரங்களிலும் சமீபகாலமாக நிலநடுக்கங்கள் அவ்வப்போது உணரப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஜம்மு காஷ்மீரின் கிழக்கு கட்ராவில் இருந்து கிழக்கே 97 கிலோ மீட்டர் தொலைவில் நில அதிர்வு ஏற்பட்டது. இன்று அதிகாலை 5.01 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.