இனி மதுபான விற்பனைக்கு ‘பசு வரி’ - மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு..!!
இமாச்சலப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் படியான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, பெண்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை, மின்சார வாகனங்களுக்கான மானியம் போன்ற திட்டங்களையும் அறிவித்துள்ளது. அதேபோல, தனது மற்றொரு தேர்தல் வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தினையும் முதல்வர் அறிவித்துள்ளார். இதனால், 1.36 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர்.
மாநிலத்தின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.53,413 கோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வரும் 2026ம் ஆண்டுக்குள் இமாச்சலப் பிரதேசத்தை பசுமை மாநிலமாக மாற்ற தனது அரசு பாடுபடும் என்று முதல்வர் சுகு தெரிவித்துள்ளார். இதற்காக சுற்றுச்சூழல் மாசினை கட்டுப்படுத்த மின்சார வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும்.
மாநில போக்குவரத்து துறையில் உள்ள 1,500 டீசல் பேருந்துகள் மாற்றப்பட்டு, ரூ.1,000 கோடி செலவில் மின்சார பேருந்துகள் புதிதாக வாங்கப்படும். அதேபோல், மின்வாகனங்களுக்கான மின்சார்ஜ் மையங்கள் அமைக்க இளைஞர்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். 200 கிலோ வாட் முதல் 2 மெகா வாட் வரையிலான சிறிய நீர்மின் திட்டங்கள் அமைக்க இளைஞர்களுக்கு அரசு 40 சதவீதம் மானியம் வழங்கும். மேலும், மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 20 ஆயிரம் மாணவிகளுக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இனி விற்கப்படும் மதுபானங்களுக்கு "பசு வரி" செலுத்த வேண்டும் என இமாச்சலப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி, அம்மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.