இதே நிலை நீடித்தால் பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் - தேசிய பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்..!!
நேற்று டெல்லியில் காற்று மாசு அளவீடு செய்யப்பட்டதில், 'மிகவும் மோசம்' என பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன. மேலும், 'காற்றில் விஷத்தன்மையுள்ள மாசு உள்ளதால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என டாக்டர்கள், நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
டெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் நேற்று விடுத்துள்ள செய்தியில், 'காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டாம். தனியார் நிறுவனங்கள் அனைத்தும் வீடுகளில் இருந்து வேலை செய்ய ஊழியர்களுக்கு தேவையானவற்றை செய்து தர வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
குழந்தைகள் உரிமை தேசிய பாதுகாப்பு ஆணையம் நேற்று டெல்லி மாநில அரசின் தலைமை செயலாளருக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 'காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு தவறி விட்டது.
காற்றில் விஷத்தன்மை உள்ளதால் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். உயிர்களை இழக்கும் நிலை கூட ஏற்படலாம். எனவே இதில் அலட்சியமாக இருக்க முடியாது. டெல்லி அரசின் அலட்சியப் போக்கு நீடித்தால் பள்ளிகளை மூட உத்தரவிட நேரிடும்' என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் பள்ளி மைதானங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் விளையாடுவதை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். காற்று மாசை கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக 24 மணி நேரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று குழந்தைகள் உரிமை தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனுங்கோ மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.