1. Home
  2. தமிழ்நாடு

ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்த வாசகங்கள்.. முழு விவரம்..!

ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்த வாசகங்கள்.. முழு விவரம்..!

தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு, திராவிட மாடல் என்ற வார்த்தைகளை படிக்காமல் புறக்கணித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

ஆனால், தமிழக அரசு தயாரித்து அச்சிட்ட ஆளுநர் உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்று தமிழக முதல்வர் பேரவையில் அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.


தமிழ்நாடு என்ற வார்த்தை இடம்பெற்ற ஒவ்வொரு வாசகத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்துவிட்டார். சில இடங்களில் தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்குப் பதிலாக இந்த அரசு என்று ஆர்.என். ரவி குறிப்பிட்டிருந்தார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று (9ம் தேதி) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

ஆளுநர் வாசிக்கத் தவிர்த்த வாசகங்களில், வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற முத்தமிழறிஞர் கருணாநிதியின் கொள்கை நிலைப்பாட்டுடன் செயல்படும் இந்த அரசு, தமிழ்மொழியின் உரிமையைக் காக்கும் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

அது மட்டுமல்லாமல், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா என தமிழகத்தின் மிக முக்கிய தலைவர்களின் பெயர்கள் கொண்ட வாசகத்தையும் அவர் உச்சரிக்கவில்லை. அதாவது, சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது என்பதையும் ஆளுநர் வாசிக்கவில்லை.

ஆளுநர் வாசிக்க தவிர்த்த ஒவ்வொரு வாசகத்திலும் தமிழ்நாடு என்ற வார்த்தை இடம்பெற்றிருந்ததாகவும், திராவிட மாடல் பாதையில் தமிழ்நாடு அரசு நடைபோடுகிறது என்ற வாசகத்தையும் படிக்காமல் தவிர்த்தார் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.

சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால், தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது. இதனால் பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்து, அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்ற வாசனத்தையும் ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆளுநரின் இந்த உரைக்கு, பேரவைக் கூட்டத்திலேயே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனத்தைப் பதிவு செய்தார். தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை. அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு என்று பேரவையிலேயே முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

ஆளுநரின் உரைக்கு பேரவைக் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், ஆளுநரின் செயலை முதல்வர் பேரவையிலேயே விமரிசித்துப் பேசினார். இனால், கூட்டத்திலிருந்து பாதியிலேயே ஆளுநர் புறப்பட்டுச் சென்றார்.

Trending News

Latest News

You May Like