1. Home
  2. தமிழ்நாடு

ஆந்திரா சுங்கச் சாவடியில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்..!!

ஆந்திரா சுங்கச் சாவடியில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்..!!

ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியில் தனியார் சட்டக் கல்லூரிகளில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படித்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் சுமார் 50 பேர், நேற்று நடைபெற்ற தேர்வை எழுதிய பிறகு, கார்களில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், ஆந்திரா - தமிழ்நாடு எல்லையில் வடமாலைப்பேட்டை என்ற இடத்தில் தேசிய சுங்கச்சாவடியில் பாஸ்டாக் மூலம் பணம் செலுத்துவதில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது.

ஆந்திரா சுங்கச் சாவடியில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்..!!

அதைத் தொடர்ந்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒன்று சேர்ந்து மாணவர்கள் வந்த கார் ஒன்றை அடித்து நொறுக்கினர். மாணவர்கள் அவர்களை தட்டிக் கேட்ட போது, அங்கு ஒன்று திரண்ட உள்ளூர் பொதுமக்களும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக சேர்ந்து, மாணவர்களை தாக்கத் தொடங்கினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இரு தரப்பையும் சமாதானப்படுத்தி, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, தமிழ்நாடு சட்ட மாணவர்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து இன்று கண்டனப் போராட்டம் நடத்தவும் சட்டக் கல்லூரி மாணவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் தமிழ்நாடு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விசிக தலைவரும், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆந்திர எல்லை புத்தூர் சுங்கச்சாவடியில் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறினை அடுத்து தமிழ்நாட்டைச் சார்ந்த கல்லூரி மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு உள்ளனர். ஏராளமான வண்டிகள் உடைத்து நொறுக்கப்பட்டு உள்ளன. தாக்கப்பட்டவர்களின் நிலை தெரியவில்லை. இது குறித்து தமிழ்நாடு முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.



Trending News

Latest News

You May Like