அதிர்ச்சி! தனியார் பேருந்து மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பேருந்து மோதி 11 வயது பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போச்சம்பள்ளி அருகே பாப்பானூர் கிராமத்தைச் சேர்ந்த நசீர் என்பவரின் மகன் முகமது அலி (11) அரசம்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். அவர் காலை வழக்கம் போல் மிதிவண்டியில் பள்ளிக்குச் சென்றார்.
அப்போது புலியூர் ஏரிக்கரை அருகே பின்னால் வந்த தனியார் பேருந்து முகமது அலி மிதிவண்டி மீது மோதியது. இதில் முகமது அலி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போச்சம்பள்ளி காவல் துறையினர் முகமது அலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனை பறிகொடுத்த தாய் கதறி அழுதது காண்போரை கலங்க செய்தது. இந்த பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
newstm.in