1. Home
  2. தமிழ்நாடு

ஜாபர் சாதிக் தனது 2 ஐபோன்களையும் நேப்பியர் பாலத்திற்கு அருகே உடைத்து வீசியுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தகவல் !

1

சென்னையை சேர்ந்தவர் ஜாபர் சாதிக். இவர் திமுகவில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார்.

இந்நிலையில் தான் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ஜாபர் சாதிக் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜாபர் சாதிக் திமுவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோனில் அதிகாரிகள் சோதனை நடத்தி போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் சூடோபெட்ரின் என்ற பொருள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தான் ராஜஸ்தானில் பதுங்கிய ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அதேபோல் ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதானந்தம் என்பவரும் சென்னை தேனாம்பேட்டையில் கைது செய்யப்பட்டார். இவர்களை காவலில் எடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தான் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கைதான ஜாபர் சாதிக் உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகை தொடர்பான முக்கிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தியதை ஜாபர் சாதிக் ஒப்புக்கொண்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது ஜாபர் சாதிக் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளார். 

டெல்லியில் 50 கிலோ போதைப்பொருள் வழக்கில் மூன்று பேர் கைதான உடனே, ஜாபர் சாதிக் தனது இரண்டு ஐ-போன்களையும் நேப்பியர் பாலம் அருகே உடைத்து தூக்கி வீசியதாகவும் குற்றப் பத்திரிகையில் என்சிபி குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தி இருப்பதாக ஒப்புக்கொண்டதாகவும், வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தல் மூலமாக கிடைக்கும் பணத்தை பீச் ஸ்டேஷனில் உள்ள மணி எக்ஸ்சேஞ்ச் மூலமாக மாற்றி இருப்பதாகவும், அதனை என்சிபி சோதனையிட்டுச் சென்றதாகவும் குற்றப் பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், டெல்லியில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களுடன் ஜாபர் சாதிக் உரையாடியதாக கைப்பற்றப்பட்ட செல்போன்களை அடிப்படையாக வைத்து ஜாபர் சாதிக்கிடம் என்சிபி அதிகாரிகள் திகார் சிறையில் குரல் மாதிரி பதிவு செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து ஜாபர் சாதிக் மூன்று பேருடன் உரையாடியதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக சோதனையின் முடிவு வந்திருப்பதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like