அம்பானிக்கும், குடும்பத்தினருக்கும் ‘Z பிளஸ்’ பாதுகாப்பு..!!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உச்சக்கட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குமாறு மத்திய அரசு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், முகேஷ் அம்பானிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த இசட் பிளஸ் பாதுகாப்பிற்கான மாதாந்திர செலவுகளை அனைத்தையும் முகேஷ் அம்பானியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
தற்போது முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி வரும் நிலையில், அது குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், அவரது குடும்பத்திற்கும் மகாராஷ்டிரா மாநில அரசு காவல்துறை பாதுகாப்பை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்திற்கான ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பை வழங்குவது தொடர்பான உத்தரவை விரைவில் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.