வருத்தம் தெரிவித்து யூடியூபர் இர்ஃபான் கடிதம்..!! இந்த முறையாவது நடவக்கை பாயுமா ?

பிரபல யூடியூபராக இருப்பவர் இர்பான். இவர் ஹோட்டல்களில் ‛ஃபுட் ரிவ்யூ' செய்து வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். அப்போது முதல் அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவர் ரிவ்யூ செய்து சூப்பர் என கூறிய ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரெய்டு நடத்தி கெட்டுப்போன உணவு பொருட்களை பறிமுதல் செய்தது பெரும் விவாதத்தை கிளப்பியது.
இது ஒருபுறம் இருந்தாலும் இர்பான் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களை வீடியோவாக்கி யூடியூப்பில் பதிவேற்றினார். இர்பான் - ஆசிஃபா என்பவரை திருமணம் செய்தார். இவரது திருமணம் மற்றும் அதனை சார்ந்த சடங்கு, சம்பிரதாயங்களை அவர் வீடியோவாக்கி வெளியிட்டு இருந்தார்.
அதன்பிறகு மனைவி ஆசிஃபா கர்ப்பமானது உள்ளிட்டவற்றையும் வீடியோவாக பதிவிட்டார். அதுமட்டுமின்றி அவருக்கு ஒரு வித்தியாசமான ஆசை தோன்றியது. தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து வெளியிட்டார். நம் நாட்டில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறிவது சட்டப்படி குற்றம். இதனால் இர்பான் துபாய் சென்று தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதையும் வீடியோவாக வெளியிட்டார்.
இது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. யூடியூபர் இர்பானை கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவரை பின்பற்றி பலரும் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டுப்பிடித்து அழிக்க வாய்ப்பு ஏற்படும் என்று கூறினர். ஆனால் போலீசார் அவரை கைது செய்யவில்லை. மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் இர்பான் மன்னிப்பு கோரியதால் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் பலரும் அதிருப்தியடைந்தனர்.
தற்போது அவர் இன்னொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது கடந்த ஜூலைமாதம் பெண் குழந்தை பிறந்தது. சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையின் தொப்புள்கொடியை இர்பான் வெட்டினார். பொதுவாக பயிற்சி பெற்ற டாக்டர் தான் தாய்க்கும், குழந்தைகளுக்கும் இடையேயான தொப்புள்கொடியை வெட்டுவார்கள்.
ஆனால் மருத்துவமனையில் இருந்த டாக்டர் நிவேதிதா, இர்பானிடம் தொப்புள்கொடியை வெட்டுகிறீர்களா? எனக்கேட்டு அதனை செய்ய வைத்தார். இதையும் இர்பான் வீடியோவாக தனது யூடியூப்பில் வெளியிட்டார். இந்த வீடியோ சர்ச்சையானது. இதையடுத்து இர்பான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மேலும் இதுபற்றி ஊரக மருத்துவ இயக்ககம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் குழந்தையின் தொப்புள்கொடியை வெட்ட அனுமதித்த தனியார் மருத்துவமனை வரும் 10 நாட்கள் மருத்துவம் பார்க்க தடை விதிக்கப்பட்டு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல, பிரசவம் பார்த்த மகப்பேறு டாக்டர் நிவேதிதா மற்றும் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கும்படி, செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு, மருத்துவ ஊரக நல பணிகள் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். ஆனால் யூடியூபர் இர்பான் மீது மட்டும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இந்நிலையில், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய காணொளி விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து மருத்துவத்துறைக்கு யூடியூபர் இர்ஃபான் கடிதம் எழுதியுள்ளார். வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலமாக தனது தரப்பு வருத்தத்தை கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துள்ளார். எந்த உள்நோக்கத்துடனும் காணொளிப் பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் இர்ஃபான் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.