செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் தீக்குளிப்பு..!
செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை அடுத்த திரிசூலம் பகுதி வைத்தியர் தெருவில் வசித்து வருபவர் பாபு(44). இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் கன்னியப்பன் என்பவருக்கும் கடந்த பல ஆண்டுகளாக நிலப்பிரச்னை இருந்து வருகிறது. நிலப்பிரச்சனை தொடர்பாக இருவீட்டாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் பாபுவும், அவரது தந்தை பொன்னுசாமியும் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் , கன்னியப்பனை எச்சரித்துள்ளனர். எனினும் மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து தகராறு மற்றும் கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது புகார் மனுவின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தனது நிலப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்று காலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு பாபு வந்திருந்தார்.
இந்நிலையில் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனது உடலில் பொட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலைச் செய்து கொள்ளும் முயற்சியில் பற்ற வைத்துக் கொண்டார். இதை கவனித்த பொதுமக்கள் பதறியடித்தபடியே உடனடியாக பாபுவின் மீது தண்ணீரை ஊற்றி, அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 70 சதவித தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் பாபு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு அளிக்க வந்தவர் திடீரென தனது உடலில் பொட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.