போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்!

மதுரையில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வாழைத்தோப்பு கிராமத்தை சேர்ந்த இதயக்கனி என்பவர் 17 வயது இளம் பெண்ணை காதலித்து அழைத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
இதனையடுத்து அவர் மீது பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் இதயக்கனியின் சகோதரர்களான ரமேஷ், சந்தோஷ் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அந்த வகையில் ரமேஷை விசாரணைக்காக வீட்டுக்கு வந்து அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மறுநாள் காலை வரை வீடுதிரும்பவில்லை. காவல் நிலையம் சென்று கேட்ட போது அவரை வீட்டிக்கு அனுப்பிவிட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் ரமேஷ் அவரது வீட்டுக்கு அருகே உள்ள மலைப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தால், அவரது உயிரிழப்புக்கு போலீஸார் தான் காரணம் என குற்றம்சாட்டுகின்றனர்.
ரமேஷின் உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாவட்ட எஸ்.பி சுஜித் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்கண்ணன், காவலர் புதியராஜா உள்ளிட்ட நான்கு காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in