தொடரும் சோகம்: ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை..!
மயிலாடுதுறை பெரியத்தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் தினசீலன்(31). இவர், சுவாமிமலையில் உள்ள தனியார் விடுதியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், தினசீலன், புதன்கிழமை காலை வழக்கம் போல் எழுந்து சில பணிகளைச் செய்து விட்டு மீண்டும் தனது அறைக்குச் சென்றுள்ளார். பின்னர், நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வராததால், அங்கு சென்று பார்த்தபோது, தினசீலன், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது தொடர்பாக மயிலாடுதுறையில் உள்ள அவரது உறவினர்களுக்கும், சுவாமிமலை காவல் நிலையத்துக்கும் விடுதி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து, தினசீலனின் தாயார் கஸ்தூரி, சுவாமிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இந்த தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், தினசீலன் மயிலாடுதுறையில் பல்வேறு நபர்களிடம் லட்சக்கணக்கான ரூபாயை கடனாகப் பெற்று ஆன்லைன் ரம்மி விளையாடி அந்தப் பணம் முழுவதையும் இழந்துள்ளார். இதையறிந்த, அவரது உறவினர்கள், கடந்த 2 மாதத்துக்கு முன்புதான் சுவாமிமலையில் உள்ள தனியார் விடுதியில் அவருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளனர். அங்கு வந்தபிறகும், தினசீலன் ஆன்லைனில் ரம்மி விளையாடி பல ஆயிரங்களை இழந்திருக்கிறார். அதனை திருப்பி தர முடியாததால், மன வேதனையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தற்கொலைக்கு முன்னதாக கடிதம் எழுதி அதை தனது பாக்கெட்டில் வைத்திருந்திருக்கிறார். அந்தக் கடிதத்தை கைப்பற்றிய போலீஸார், தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.