பூனைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற இளைஞர் கைது !
பூனைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற இளைஞர் கைது !

சென்னை நுங்கம்பாக்கம் ராமா தெருவை சேர்ந்தவர் பிரகதீஷ் என்பவர் தனியார் திருமண சேவை மையம் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
இந்த பூனை அவ்வப்போது பக்கத்துவீட்டில் வசித்து வரும் ரவி என்பவர் வீட்டில் புகுந்து தொல்லை அளித்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரவி பூனையை கட்டையால் அடித்து விரட்டியதால் அவருக்கும், பிரகதீஸ்க்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது.
மேலும் ரவி மீது பிரகதீஷ் ஏற்கனவே நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது இனி பூனையை அடிக்க மாட்டேன் என காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பிரகதிஷ் தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்று உள்ளார். பின்னர் சென்னை திரும்பிய அவர் வீட்டின் வாசலில் பூனை இறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் வாசலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தப்போது, ரவியின் மகன் சக்தி பூனைக்கு பால் வைப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
இதனால் ரவி மற்றும் அவரது மகன் சக்தி இருவரும் சேர்ந்து தான் வளர்த்த செல்லப் பூனைகளுக்கு பாலில் விஷம் வைத்து கொன்று இருக்கலாம் என்கிற அடிப்படையில் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ரவி மீண்டும் புகார் அளித்தார்.
புகாரை பெற்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து ரவியின் மகன் சக்தி மீது பிராணிகளுக்கு விஷம் வைத்தல், துன்புறுத்தல், கொல்லுதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
newstm.in