பாதயாத்திரை செல்லும் இளைஞர்கள்... ஏன் தெரியுமா ?
கர்நாடகாவில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஏராளமான இளைஞர்கள் தவிப்பதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். சமீபத்தில் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த திருமணமாகாத இளைஞர்கள் அனைவரும் ராஜா வேடம் அணிந்து ஊர்வலமாக சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் கோடஹள்ளி கிராமத்தில், விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைப்பது இல்லை. விவசாயம் செய்வதால் அவர்களுக்கு பெண் கொடுக்க சிலர் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி, கோடஹள்ளி கிராமத்தில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கடந்த 3-ம் தேதி காலை கிராமத்தில் இருந்து, 160 கிலோ மீட்டர் துாரத்தில், மாதேஸ்வரன் மலையில் உள்ள மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
தங்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவும்; நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டி, பாதயாத்திரை செல்வதாக இளைஞர்கள் கூறியுள்ளனர். கடந்த 3-ம் தேதி துவங்கிய பாதயாத்திரை, இன்று (நவ. 6) நிறைவு பெறுகிறது.