அ.தி.மு.க.விற்கு உங்கள் ஆதரவினை தர வேண்டும் : எடப்பாடி பழனிசாமி..!
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காங்கேயம் சென்றார். அப்போது காங்கேயம் பஸ் நிலையம் எதிரே 52 அடி நீளம் உயரமுள்ள கொடி கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை அவர் ஏற்றி வைத்தார். அதை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
தி.மு.க. அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரண்டரை ஆண்டுகளில் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதி நெசவு, வேளாண் தொழில் நிறைந்த பகுதி. இந்த தொழில் செய்பவர்கள் தி.மு.க. அரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொப்பரை விலை அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்றி கொடுக்கப்பட்டது. மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டு வேளாண் துறை சிறப்பாக இருந்தது. தி.மு.க. அரசு விவசாயிகளுக்கு 2 லட்சம் பம்பு செட் கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் எப்போது மின்சாரம் வரும், மின்சாரம் வராது என்பது தெரியாமல் விவசாயிகள் அவதியுறுகின்றனர்.
அந்த அளவுக்கு மின் தடை உள்ளது. அதேபோல் நெசவாளர்கள் துணிக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. இதனால் கைத்தறி, விசைத்தறி தொழில் புரிபவர்கள் நலிவடைந்து தறிகளை எடைக்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் நெசவாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் விவசாயம், நெசவு தொழில் தி.மு.க. ஆட்சியில் அழிந்து வருகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
எனவே இந்நிலை மாற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு உங்கள் ஆதரவினை தர வேண்டும். அ.தி.மு.க. நிறுத்தும் வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.