உங்களுக்கு நாளை வரை தான் டைம்..! கங்குவா படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் நிபந்தனை..!
இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பிரமாண்ட பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை, பான் இந்தியா மார்க்கெட்டை குறிவைத்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி கங்குவா ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தனர். ரஜினிகாந்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக சூர்யா தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நவம்பர் 14 ஆம் தேதி கங்குவா படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்தனர். படக்குழு இந்தியா முழுவதும் பயணித்து ப்ரொமோசன்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மொத்தம் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், இந்தாண்டு முதல் பாகத்தை வெளியிட உள்ளனர்.
பாடல்கள், டிரெய்லர், டீசர் வெளியாகி படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சூர்யா நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் தான் திரையரங்கில் வெளியாகியிருந்தது. இதனால் சூர்யா ரசிகர்களும் கங்குவா படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
உலகம் முழுவதும் சுமார் 11,000 திரைகளில் கங்குவாவை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டனர். பிரமாண்ட பொருட் செலவு, பான் இந்தியா மார்க்கெட் உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தேதியில் படக்குழு மிகவும் கவனமாகவே இருந்தது. போட்டி படங்களால் கங்குவா பிசினஸ் பாதிக்கப் படக்கூடாது என்று நினைத்தனர். அதன் காரணமாகவே அக்டோபர் 10 ஆம் தேதியோ, தீபாவளி பண்டிகையின் போதோ கங்குவா ரீலிஸ் ஆகவில்லை.
இந்நிலையில்,அர்ஜுன் லால் என்பவரிடம் பெற்ற கடனை வசூலிப்பது தொடர்பாக சொத்தாட்சியர் வழக்கு தாக்கல் செய்தார். அர்ஜுன் லால் திரைத்துறையில் பலருக்கு கடன் கொடுத்துள்ளார். நிதி இழப்பு ஏற்படவே, அவர் திவாலானதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட அவரது சொத்துகளை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, கடன் வாங்கியவர்களிடம் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் அர்ஜுன் லாலிடம் கடன் பெற்றுவிட்டு திரும்பச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.
அந்த அடிப்படையில், சொத்தாட்சியர் தாக்கல் செய்த வழக்கில் ரூபாய் 20 கோடியை வரும் 13 ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் 'கங்குவா' திரைப்படத்தை வெளியிடக் கூடாது என ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.