தோல்வி கண்டு துவளத் தேவையில்லை..! கருணாநிதியாலேயே 2வது முறை தொடர்ந்து ஆட்சிக்கு வரமுடியவில்லை...ஸ்டாலினால் மட்டும் முடியுமா?
கரூர் மாவட்ட அதிமுக சார்பாக சார்பில் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கரூர் அருகேயுள்ள மணவாடி தனியார் மண்டபத்தில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் எஸ்.திருவிக வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக தாந்தோணி கிழக்கு செயலாளரும், ஏமூர் ஊராட்சி மன்றத் தலைவருமான விசிகே.பாலகிருஷ்ணனுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி தொடங்கி வைத்து பேசியது: அதிமுகவின் உறுப்பினர் அட்டையை வைத்திருப்பதே பெருமையாகும். திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை சீரழித்துள்ளது. ஓய்வூதியர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்களை நியமித்து வருகின்றனர். 3 ஆண்டுகளாக இருந்த ஊதிய ஒப்பந்த காலத்தை 4 ஆண்டுளாக்கி விட்டனர். திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்கள் இது குறித்து பேசுவதில்லை. கள்ளக்குறிச்சியில் விஷசாராயத்தால் 68 பேர் உயிரிழந்ததை மூடி மறைத்துவிட்டனர். விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றிவிட்டனர்.
எந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி என்பது 10 ஆண்டுகள் ஆட்சியில் தெரிந்திருக்கும். கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து 75 இடங்களை பெற்றோம். இது பழனிசாமிக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கை காட்டுகிறது. திமுக ஆட்சியை இழந்த 2011ம் ஆண்டு தேர்தலில் 24 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.
கருணாநிதியாலேயே 2வது முறை தொடர்ந்து ஆட்சிக்கு வரமுடியவில்லை. ஸ்டாலினால் மட்டும் முடிந்துவிடுமா? அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான அஸ்திவாரம் தான் இந்த உறுப்பினர் அட்டை வழங்குதல். தோல்வி கண்டு துவளத் தேவையில்லை. 1996ம் ஆண்டு தோல்விக்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைக்க பாடுவோம் என்றார்.
அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ம.சின்னசாமி பேசுகையில், “அதிமுகவில் இளைஞர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இளைஞர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். சிலர் தனிக்கட்சி தொடங்குகின்றனர். அது நாடகத்தில் கோமாளி வருவதுப் போலதான். ஆனால், அதிமுகதான் ஹீரோ கட்சி” என்று சின்னசாமி கூறினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.