இதை பற்றி கூட கேரள, கர்நாடக அரசிடம் பேசியிருக்கலாமே..! - வானதி சீனிவாசன்..!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது x தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர், 'மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடக்காது, அதனால் எந்த மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது' என உறுதியளித்த பிறகும் கூட, தொகுதிகள் குறைகிறது என்ற பொய்யைப் பரப்ப அனைத்துக் கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டம் நடத்திய முதல்வரே,
அப்படியே அந்தக் கூட்டத்தில் கேரளக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டக் கூடாது என அம்மாநில முதல்வரிடமும், மேகதாது அணையை கட்டும் திட்டத்தை கைவிட்டு தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை வழங்கவேண்டும் என கர்நாடக முதல்வரிடமும் நீங்கள் வலியுறுத்தியிருக்கலாமே?
"தொகுதிகள் குறைப்பு" என்ற ஒரு பொய் குற்றச்சாட்டை நிரூபிக்க இத்தனை பாடுபடும் நீங்கள், நமது அண்டை மாநிலங்களால் புதைந்து போன தமிழக உரிமைகளை மீட்டெடுக்க ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டீர்களா?
சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கை மறைக்க ஹிந்தி திணிப்பு என்றும், டாஸ்மாக் ஊழலை மறைக்க தொகுதி மறுசீரமைப்பு என்றும் விதவிதமான நாடகங்களை அரங்கேற்றுவதிலும், அடிக்கடி காணொளி நடித்து வெளியிடுவதிலுமே முழு கவனம் செலுத்தும் நீங்கள், நடைமுறையில் உள்ள மக்கள் பிரச்சினைகளுக்கு எப்பொழுது தான் தீர்வு காண்பீர்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற எண்ணிக்கைகளை மக்கள் தொகைக்கு ஏற்ப கூட்டவும், குறைக்கவும் வழிவகுப்பதுதான் 'தொகுதி வரையறை'. மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தென் மாநிலங்கள் அடிவாங்கும். இந்த பிரச்சனைக்கு கடந்த 1976ம் ஆண்டு எமெர்ஜென்சி காலத்தில் 42வது அரசமைப்பு திருத்தம் மூலம் தீர்வு கொண்டுவரப்பட்டது.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு (2001 வரை) மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரை செய்ய கூடாது என்று இந்த திருத்தம் சொன்னது. 2001ல் அடுத்த 25 ஆண்டுகளுக்கு (2026) வரை மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதை வாஜ்பாய் நிறுத்தி வைத்தார்.
தொடர்ச்சியாக 50 ஆண்டுகள் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வட மாநிலங்கள் எடுத்த முயற்சி தொடர் தோல்வியடைந்துள்ளன. இப்படி இருக்கையில் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு அதன் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் உருவாகியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால்.. தென் இந்தியாவின் இடங்கள் 30% என்பதலிருந்து 20% என குறையும் அபாயம் உள்ளது.
இந்த அச்சம் காரணமாகத்தான் தென் மாநிலத்தின் முதல்வர்கள், துணை முதல்வர் இதர முக்கிய அதிகாரிகள் இன்று ஒன்றாக கூடி, மத்திய அரசு இதை செய்யக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். இதில் காங்கிரஸ் சார்பில் கர்நாடக துணை முதல்வரும், தெலங்கானா முதல்வரும் பங்கேற்றிருந்தனர். கேரளா சார்பில் அதன் முதல்வர் பினராயி விஜயனும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.