இனி இந்த டாக்ஸி-ஐ நீங்கள் பார்க்க முடியாது..! சோகத்தில் ஓட்டுனர்கள்..!

மும்பை நகரத்திற்கு மிகப் பெரிய தலை வலியாக காற்று மாசுபாடு உருவாகி இருக்கின்றது. இதனைக் குறைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மும்பை மாநகராட்சி மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாகவே அண்மையில் நகரத்தின் புகழ்பெற்ற பேருந்துகளான டபுள் டெக்கர் பஸ்கள் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டன. இந்த பேருந்துகள் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அன்றே அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டன.
இந்த வாகனங்களைத் தொடர்ந்தே தற்போது மற்றுமொரு அடையாளமான கருப்பு மற்றும் மஞ்சள் நிற டாக்சிகளான பிரீமியர் பத்மினி கார்கள் பயன்பாட்டில் வெளியேற்றப்பட்டு இருக்கின்றன.கடைசியாக, மஞ்சள் கருப்பு நிற பிரீமியர் பத்மினி டாக்சி மும்பை நகரத்தில் அக்டோபர் 29, 2003 ஆம் ஆண்டிலேயே பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.
மும்பையின் டார்டியோ ஆர்டிஓ-விலேயே அந்த வாகனத்திற்கான பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த கார் தற்போது 20 ஆண்டுகளை எட்டிவிட்டது. மும்பை நகரத்தில் 20 ஆண்டுகள் பழைய வாகனம் இயங்க அனுமதி கிடையாது. குறிப்பாக டாக்சிகள் விஷயத்தில் இந்த விதி கடுமையாக பின்பற்றப்படுகின்றது.
ஆகையால், கடைசியாக பயன்பாட்டில் இருந்த பத்மினியும் இன்றுடன் வெளியேற்றப்பட்டு இருக்கின்றது. எனவே மும்பையில் இனி அதிகாரப்பூர்வமாக பிரீமியர் பத்மினி டாக்சி பயன்பாட்டில் இல்லாத சூழலேயே இப்போது உருவாகி இருக்கின்றது. சுமார் 60 ஆண்டு காலாக வரலாறாக இருந்து வந்த பிரீமியர் பத்மினி தற்போது பிரியா விடை பெற்றிருக்கின்றது.