இனி மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பினால் புகார் செய்யலாம் – மத்திய அரசு..!
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக நாடு வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. அதே சமயம் நூதன முறையில் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. போலியான பரிசுகள் வழங்குவது, ATM அட்டை Lock ஆகியுள்ளது என்று கூறி பல காலமாக மோசடிகள் நடத்தப்பட்டு வருகிறது. சில மோசடி நிறுவனங்கள் பொதுமக்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்து வருகின்றனர். அத்தகைய நிறுவனங்களுக்கு தடை விதித்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தொலைத்தொடர்பு துறை நடத்திய ஆய்வின் அடிப்படையில் 3 மாதங்களில் 8 குறுஞ்செய்தி தலைப்புகள் பயன்படுத்தி குறுஞ்செய்திகளை அனுப்பிய நிறுவனங்களை தொலைத்தொடர்பு துறை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 73 குறுஞ்செய்தி தலைப்புகளும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டன.இதனால், இனிமேல் இந்த நிறுவனங்களால் குறுஞ்செய்தி அனுப்ப முடியாது.மேற்கொண்டு யாரும் பாதிக்கப்படாமல் தடுக்கப்பட்டதாக தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற மோசடிகளை தடுக்க பெறப்படும் மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து ‘சஞ்சாய் சாதி’ இணையதளத்தில் பொதுமக்கள் புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் மூலம் வணிக நோக்கத்திலான குறுஞ்செய்திகளை அனுப்பினால் அந்த செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.