உங்க மொபைல் மூலமாவே "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நடக்கும் இடத்தை தெரிந்து கொள்ளலாம்..!
உங்களுடன் ஸ்டாலின் முகாம் தினம் ஒரு பகுதியில் நடக்கும். அந்த நேரத்தில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
இந்த முகாம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மட்டுமல்ல அரசின் பிற சேவைகளுக்கும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.
உதாரணமாக ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல் ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம். உங்களின் ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்தால் உங்களின் விண்ணப்பங்களுக்கு ஓரிரு நாட்களிலேயே ஒப்புதல் கிடைத்துவிடும். அதேநேரத்தில் ஏதேனும் பிரச்சனைகள், ஆவணங்களில் குறைபாடு, சந்தேகம் இருந்தாலும் உங்களை அழைத்து கேட்பார்கள். ஒருவேளை நிராகரிக்கப்பட வேண்டிய சூழல் இருப்பின் அதற்கான காரணத்தையும் பொதுமக்களிடம் தெரிவித்துவிடுவார்கள். அதைப்போலவே, பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், கட்டட அனுமதி, வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளுக்கும் இந்த முகாமில் பொதுமக்களாகிய நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒருவேளை தொழில் தொடங்குபவராக இருந்தால் சமூகத்தில் எந்த பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்த முகாமில் கலந்துகொண்டால் என்னென்ன அரசு திட்டங்கள் இருக்கின்றன, அவற்றில் எதை தேர்வு செய்யலாம், எந்த திட்டத்தில் உடனடியாக மனுதாரரின் நிலைக்கு ஏற்ப ஒப்புதல் கிடைக்கும் என்ற தகவலும் தெரிந்து கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் உரிய சான்றுகளுடன் சென்று அரசின் திட்டங்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கவும் செய்யலாம்.
எனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் மட்டுமே கிடைக்கிறது என நினைத்துக் கொண்டு இருந்துவிடாதீர்கள். மேலும், உங்கள் மாவட்டத்தில், உங்கள் பகுதியில் ஒவ்வொரு நாளும் எங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கிறது என்பதை நீங்கள் ஆன்லைன் வழியாகவே தெரிந்து கொள்ளலாம். யாரையும் நேரில் சென்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அதற்கு நீங்கள் https://ungaludanstalin.tn.gov.in/index.php என்ற இணைய பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
அங்கு திட்டத்தைப் பற்றி, முகாம் விவரங்கள், சேவைகள்/திட்டங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என்ற ஆப்சன் இருக்கும். அதில் நீங்கள் முகாம்கள் விவரங்கள் பகுதிக்கு சென்று உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்தால் இன்றைய தேதியில் எங்கெல்லாம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். அத்துடன் முகாம் குறித்த தகவல்கள் பிடிஎப் வடிவில் நீங்கள் பதிவிறக்கமும் செய்து கொள்ள முடியும்.
மேலும், சேவைகள் திட்டங்கள் பகுதிக்கு சென்றால் துறைவாரியாக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது, அந்த திட்டங்களுக்கான தகுதிகள் என்ன, வயது வரம்பு, திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பவை எல்லாம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வலைதளத்தில் உள்ள தகவலை பார்த்து உங்களுக்கான திட்டங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.