வெறும் ரூ.3000 கட்டணத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கலாம்..!

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் மட்டுமின்றி, பல்வேறு வகையான துணை மருத்துவப் படிப்புகளும் வழங்கப்படுகிறது. 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் இப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. நர்சிங், பார்மசி அல்லாமல் 17 துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. தற்போது இப்படிப்புகளில் 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது. ஒரு வருடத்திற்கு வெறும் ரூ.3,000 கல்வி கட்டணத்தில் இப்படிப்புகள் வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் 17 துணை மருத்துவப் படிப்புகள் என்னென்ன, இப்படிப்புகளில் சேர என்ன தகுதித் தேவை, கல்வி கட்டணம், சேர்க்கை முறை, விண்ணப்பிப்பது எப்படி உள்ளிட்ட விவரங்கள் இந்த பதிவில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.
என்னென்ன படிப்புகள் உள்ளன?
1. B.P.T. இளங்கலை பிசியோதெரபி
இப்படிப்பு 4 வருடங்கள் வழங்கப்படும் பட்டப்படிப்பு ஆகும். 8 செமஸ்டர் மற்றும் 6 மாத பயிற்சியுடன் வழங்கப்படும்.
2. B.ASLP - செவிப்புலன் மருத்துவம் மற்றும் பேச்சு மொழி நோயியலில் இளங்கலைப் பட்டம்
இப்படிப்பு 4 வருடம் மற்றும் 1 வருட பயிற்சியுடன் வழங்கப்படுகிறது.
3. கதிரியக்கவியல் & இமேஜிங் தொழில்நுட்பம் (B.Sc. Radiology & Imaging
Technology)
இப்படிப்பு 3 வருடப் படிப்பாகும். 1 மருடம் கண்டிப்பாக பயிற்சி பெற வேண்டும்.
4. ரேடியோதெரபி தொழில்நுட்பம் (B.Sc. Radio Therapy Technology)
இது 3 வருடப்படிப்பு. 1 வருடம் பயிற்சி கட்டாயம்.
5. கார்டியோ-பல்மனரி பெர்ஃப்யூஷன் தொழில்நுட்பம் (B.Sc. Cardio-Pulmonary Perfusion Technology)
இப்படிப்பு 3 வருடங்களுக்கு வழங்கப்படுகிறது. கட்டாயம் 1 வருட பயிற்சி உள்ளது.
6. மருத்துவ ஆய்வகம் தொழில்நுட்பம் ( B.Sc. Medical Laboratory Technology)
இது 3 வருடம் மற்றும் 1 வருட பயிற்சி கொண்ட பட்டப்படிப்பு ஆகும்.
7. அறுவை சிகிச்சை அரங்கம் & மயக்க மருந்து தொழில்நுட்பம் ( B.Sc. Operation Theatre &
Anaesthesia Technology)
இப்படிப்பு 3 வருடப் படிப்பாகும். ஒரு வருடம் பயிற்சி கட்டாயம்.
8. கார்டியாக் டெக்னாலஜி (B.Sc. Cardiac Technology)
இப்படிப்பு 3 வருடங்கள் மற்றும் 1 வருட பயிற்சி உடன் வரும் பட்டப்படிப்பு ஆகும்.
9. கிரிட்டிகல் கேர் தொழில்நுட்பம் (B.Sc. Critical Care Technology)
இப்படிப்பும் 3 வருடம் வரும் மற்றும் 1 வருட பயிற்சி கட்டாயம்.
10. டயாலிசிஸ் தொழில்நுட்பம் (B.Sc. Dialysis Technology)
இப்படிப்பு 3 வருடம் பட்டப்படிப்பாகும். கட்டாயம் 1 வருட பயிற்சி தேவை.
11.மருத்துவர் உதவியாளர் (B.Sc. Physician Assistant)
இப்படிப்பும் 3 வருட படிப்பு ஆகும். 1 வருடம் பயிற்சி பெற வேண்டும்.
12. விபத்து & அவசர சிகிச்சை தொழில்நுட்பம் (B.Sc. Accident & Emergency Care
Technology)
இப்படிப்பும் 3 வருடம் வழங்கப்படும் பட்டப்படிப்பு. 1 வருடம் பயிற்சி முடிக்க வேண்டும்.
13. சுவாச சிகிச்சை ( B.Sc. Respiratory Therapy)
இதுவும் 3 வருடம் வழங்கப்படும் பட்டப்படிப்பு ஆகும். கட்டாயம் 1 வருடம் பயிற்சி பெற வேண்டும்.
14. ஆப்டோமெட்ரி இளங்கலை (B. Optom)
கண் சிசிச்சையின் வரும் இப்படிப்பு 3 வருடம் வழங்கப்படுகிறது. 1 வருடம் பயிற்சி கட்டாயம் முடிக்க வேண்டும்.
15. தொழில் சிகிச்சை இளங்கலை (B.O.T)
Occupational Therapy எனப்படும் இப்படிப்பு 4 வருடம் வழங்கப்படும். 8 செமஸ்டர் மற்றும் 6 மாத கால பயிற்சி கட்டாயம்.
16. நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி (B.Sc. Neuro Electro Physiology)
இப்படிப்பு 3 வருடம் மற்றும் 1 வருட பயிற்சியுடன் வழங்கப்படுகிறது.
17. மருத்துவ ஊட்டச்சத்து (B.Sc. Clinical Nutrition)
இப்படிப்பும் 3 வருட பட்டப்படிப்பு ஆகும். 1 வருடம் பயிற்சி பெற வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் இப்படிப்புகளில் பிசியோதெரபி படிப்பிற்கு விடுதி வசதி உண்டு. இப்படிப்புகளில் BPT மற்றும் B.O.T படிப்புகள் மட்டும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் வழங்கப்படுகிறது.
இப்படிப்பிற்கான தகுதிகள் என்ன?
துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் குறைந்தபட்சம் 17 வயதை நிறம்பி இருக்க வேண்டும். அதிகபட்சம் 15 நாட்களுக்கு பின்னர் பிறந்தவர்கள் பரிசீலிக்கப்படுவார்கள்.
B.ASLP மற்றும் B.Optom படிப்புகளுக்கு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் கொண்டு படித்திருக்க வேண்டும். உயிரியலுக்கு பதில் கணிதம் மற்றும் தாவரவியல், விலங்கியல் என தனித்தனியாக படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இதர அனைத்து படிப்புகளுக்கும் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஒரு பாடமாகவும் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் கொண்டு படித்திருக்க வேண்டும்.
இப்படிப்புகளில் சேர 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். B.ASLP படிப்பிற்கு மட்டும் 40% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு தேர்ச்சி போதுமானது.
கட்டணம் எவ்வளவு?
தமிழ்நாட்டின் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இப்படிப்புகளுக்கான இடங்களுக்கு ஒரு வருடத்திற்கு கல்வி கட்டணம் ரூ.3,000 மட்டுமே ஆகும். மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி கட்டணம் மற்றும் சிறப்பு கட்டணம் செலுத்த விலக்களிக்கப்பட்டுள்ளது.
B.P.T & B.O.T தனியார் கல்லூரி கட்டணம்
தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் வழங்கப்படும் B.P.T & B.O.T இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு கட்டணமாக அரசு ஒரு வருடத்திற்கு ரூ.33,000 ஆக நிர்ணயித்து உள்ளது. விடுதி, போக்குவரத்து மற்றும் உணவு கட்டணம் தனியாக செலுத்த வேண்டும்.
கட்டண விவரங்களின் ஏதேனும் மாற்றம் இருந்தால் கலந்தாய்விற்கு போது தெரிவிக்கப்படும். ரூ.2.5 லட்சம் வருமானத்திற்கு கீழ் உள்ள எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மாணவர்களுக்கு கட்டண தளர்வு உண்டு.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
- மாணவர்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
- 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
- பள்ளி மாற்று சான்றிதழ் (டிசி)
- பிறப்பிட சான்றிதழ்
- சாதிச் சான்றிதழ்
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சான்றிதழ் (இருப்பின்)
- 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் படித்தற்கான சான்றிதழ்
- முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (இருப்பின்)
- பொற்றோர்களின் வருமான சான்றிதழ்
மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறும்?
இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://tnmedicalselection.net/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கப்பட்ட நிலையில், ஜூலை 7 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும்.
அதனைத்தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். பின்னர் கலந்தாய்விற்கான தேதிகள் தெரிவிக்கப்படும். ஆன்லைன் வழியாக மாணவர்கள் அவர்கள் விரும்பும் படிப்பு மற்றும் கல்லூரியை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்படும்.
கலந்தாய்வின் மூலம் மாணவர்களின் விரும்பிய இடங்கள் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஒதுக்கப்படும். முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கலந்தாய்வு முன்னரே நடத்தப்படும். கலந்தாய்வு கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.