உங்களுக்குப் பிடித்திருந்தால் கோமியம் குடிக்கலாம் - வானதி சீனிவாசன்!

உணவு ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட உரிமையை மதிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோமியம் குடிப்பது தொடர்பாகக் கட்சி எந்தவிதத்திலும் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறிய அவர், உங்களுக்குப் பிடித்திருந்தால் கோமியம் குடிக்கலாம் என்று கூறி இருக்கிறார்.
மாட்டுப் பொங்கல் கொண்டாட்டத்தின்போது ஐஐடி இயக்குநர் காமகோடி பேசுகையில், கோமியம் சிறந்த மருத்துவ குணங்களை கொண்டது. காய்ச்சலைக் குணமாக்கும்.
அதேபோல் பாக்டீரியா பாதிப்பு, பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராகக் கோமியம் செயல்படக் கூடியது. செரிமான கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகளை எதிர்க்கும் ஆற்றல் உண்டு என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு அமைச்சர் பொன்முடி, மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்னொரு பக்கம் பாஜக மாநில தலைவரான அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் ஆதரவு கூறினர். இதனால் தமிழக அரசியலில் கோமியம் விவகாரம் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், திருவள்ளுவரையும் வள்ளலாரையும் வேறு யாரோ களவாட முயற்சிக்கிறார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
திருவள்ளுவர் திருக்குறளில் ஹிந்து ஞான மரபின் கருத்துகளையே கூறி இருக்கிறார். கடவுள் வாழ்த்து என்று தனியாக ஒரு அதிகாரம் உள்ளது.
அதேபோல் திருக்குறளில் ஹிந்து மத கருத்துகளை வெளிப்படுத்தி இருப்பதும் அனைவரும் அறிந்தது தான். வள்ளலார் ஹிந்து சமய ஞானத்தின் ஒரு கூறாக விளங்கியவர்.
ஆனால் திராவிட மாடல் அரசு திட்டமிட்டு இந்த இரு தமிழ் அடையாளங்களை, அவர்கள் ஹிந்துக்கள் அல்லாதவர்களைப் போல அவர்களின் உருவங்களில் மத அடையாளங்களைத் தவிர்த்துவிட்டு வரைவது, அவர்களுக்கும் ஹிந்து மதத்திற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று பேசுவது எனத் தனியாக ஒரு தமிழ் அடையாளத்திற்குள்ளாக, திராவிட அடையாளத்திற்குள்ளாகச் சுயலாப அரசியலுக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
திருவள்ளுவரும் வள்ளலாரும் இந்நாட்டின் தனித்துவமான கலாச்சார பண்பாடு மற்றும் ஹிந்து மத சிந்தனைகளுக்காக அறியக்கூடியவர்கள்.
திருவள்ளுவர் குறித்து உலகம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி பேசுவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுத்து கொள்ள முடியாமல் பதற்றத்திற்குள்ளாகி இது போன்ற கருத்துகளைத் தெரிவித்து கொண்டிருக்கிறார்.
இலங்கையில் கட்டப்பட்டுள்ள கலாச்சார மையத்திற்கு திருவள்ளுவரின் பெயரைச் சூட்டியிருக்கிறது மத்திய அரசு. உலக அரங்கில் தமிழுக்கும், திருவள்ளுவருக்கும் பெருமை சேர்த்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால் திராவிட மாடல் அரசு என்று சமத்துவ பொங்கல் என்ற பெயரில் தமிழருக்கான மரபு அடையாளங்களைச் சீரழிக்க நினைக்கிறது.
பொங்கல் என்பது ஹிந்து மத பண்டிகைக்கான அடையாளம். இந்த அடையாளங்களை மறைத்துத் திமுக அரசு வேறு விதத்தில் சமத்துவ பொங்கல் என்று வேறொரு உருவத்தை வரைய நினைக்கிறார்கள்.
அதனை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து கோமியம் விவகாரம்குறித்த கேள்விக்கு, இவையெல்லாம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்.
உங்களுக்கு மருத்துவ காரணங்கள் இருக்கிறதா, பிடித்திருக்கிறதா… இல்லை சாப்பிடுறீங்களா… இந்தச் சாப்பிடும் விஷயங்கள் அனைத்தும் தனிப்பட்ட விருப்பம். இதில் கட்சி எந்தவிதத்தில் பேச முடியும். அவரவரின் தனிப்பட்ட உரிமையை மதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.