உடனே விண்ணப்பிக்கலாம்..! 11 புதிய அரசு கல்லூரிகளை தொடங்கி வைத்த முதல்வர்!

தமிழ்நாட்டில் நடப்பு 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று (மே 26) தொடங்கி வைத்தார். புதிய கல்லூரிகள் ஒவ்வொன்றும் தலா 5 பாடப் பிரிவுகளுடன் தொடங்கப்படும்.
மேலும், ஒவ்வொரு கல்லூரிக்கும் 12 ஆசிரியர்கள் (உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாமாண்டிற்கு மட்டும்) மற்றும் 14 ஆசிரியரல்லா பணியிடங்கள் வீதம் 11 கல்லூரிகளுக்கு மொத்தம் 132 ஆசிரியர்கள் மற்றும் 154 ஆசிரியரல்லா பணியிடங்களை தோற்றுவித்து 11 கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கான தொடர் மற்றும் தொடராச் செலவினத்திற்காக மொத்தம் 25 கோடியே 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்லூரிக்கும் 5 பாடப்பிரிவுகளில் ஓராண்டுக்கு 3050 மாணவர்கள் வீதம் 3 ஆண்டுகளுக்கு 9150 மாணவர்கள் பயன்பெறுவர். இன்று முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள இந்த புதிய 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்த்து தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உயர்க்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச்செயலாளர் முருகானந்தம், உயர்க்கல்வி துறை செயலாளர் சமயமூர்த்தி, கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (தொழில்நுட்ப பிரிவு) சுகுமாரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.