குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே... வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும்...
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பில், போரூர் செட்டியார் அகரம் பகுதியில், 16.60 ஏக்கர் பரப்பளவில், 12.60 கோடி ரூபாய் மதிப்பில், ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் 103 இருக்கைகள், நடைபாதை, அனைத்து வகையான விளையாட்டு மைதானம், 6.85 ஏக்கர் அளவில் ஏரி, திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம், பார்க்கிங் மற்றும் கழிப்பறை வசதி, கடைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இப்பூங்கா பணியை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான சேகர்பாபு, ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகளிடம், இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும், எப்போது பணிகள் நிறைவு பெறும் என்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, அங்கிருந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் தாமரைப் பூ இருந்ததை கண்டு, 'தாமரை வளரவே கூடாது' என, அதிகாரிகளிடம் நையாண்டியாக தெரிவித்தார்.
இந்த வீடியோவை சமூகவலைதளத்தில், பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ' தமிழக அமைச்சர் சேகர்பாபு சென்னைக்கு அருகில் உள்ள ஒரு பூங்காவை ஆய்வு செய்தபோது குளத்தில் சில பூக்கள் பூத்திருப்பதைக் கண்டு, இயற்கையை ரசிக்காமல் பீதி அடைந்துள்ளார்.
அவரது மனதில் அரசியல் உதித்துள்ளது. 'தாமரை இங்கு மலரக் கூடாது' என்று அதிகாரிகளிடம் கூறிய அவர் அகற்றுங்கள் என உத்தரவிட்டுள்ளார். இது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. தமிழகத்தில் கனமழை பெய்யும். மழையால் குளங்கள் நிரம்பும். தாமரை அதிக அளவில் மலரும். குளங்களில் என்ன அரசியல்? இவ்வாறு தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
அரசு அமைக்கும் பூங்காவில்.. குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது.. என ஆவேசப்பட்டு இருக்கிறார் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே... வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது.. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள்...
அரசுஅமைக்கும் பூங்காவிலேயே தாமரை வேண்டாம் என் ஆவேசப்படும் நீங்கள்.. தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.... நீங்கள் காலம் காலமாக கூவத்தை சுத்தம் செய்வோம் என மக்களை ஏமாற்றுவது மாற்றி கூவத்தையும் சுத்தப்படுத்தி அங்கேயும் தாமரை மலர மலர் முகத்துடன் மக்கள் காணத்தான் போகிறார்கள்... இது வெறும் சத்தமல்ல சத்தியம் சாத்தியம்... லட்சியப் பற்றுள்ள தொண்டர்களாலும் லட்சக்கணக்கில் சேர்ந்த புதிய உறுப்பினர்களாலும் இது சாத்தியம் என்பது சத்தியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.