நீங்கள் பசுத்தோல் போர்த்திய புலி.. நல்ல எண்ணத்தில் நீங்கள் இதனை செய்யவில்லை - தயாநிதி மாறன்..!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நேற்று வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். இந்த நிலையில், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். மசோதா மீது நள்ளிரவு வரை 12 மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடந்தது. வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமைகாக குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய திமுக எம்.பி தயாநிதி மாறன், எப்படியாவது இந்துக்கள் - முஸ்லீம்கள் இடையே வெறுப்பை உண்டாக்க முயற்சிக்கிறீர்கள். ஆடு நனையுதுனு என ஓநாய் அழுகலாமா? முஸ்லீம்களுக்கு பிரச்னை என்று நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?நீங்கள் பசுத்தோல் போர்த்திய புலி.. நல்ல எண்ணத்தில் நீங்கள் இதனை செய்யவில்லை என கூறினார்.
வக்பு மசோதா மீது திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியதாவது: வக்பு மசோதாவை கொண்டுவருவதற்கு முக்கிய காரணமானது எது என்றால் 71, 62, 36. இது என்ன தெரியுமா? 2014-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில், பாஜக வென்ற எம்பி சீட்டுகள் 71. 2019-ம் ஆண்டு உ.பி.யில் பாஜக வெற்றி பெற்ற எம்பி சீட்டுகள் எண்ணிக்கை 62. 2024-ம் ஆண்டு உ.பி.யில் பாஜக வெற்றி பெற்ற எம்பிக்கள் எண்ணிக்கை 36.
பாபர் மசூதியை இடிக்க வேண்டும்; அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும்; ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் என்று சொல்லி 71 இடங்களைப் பிடித்தார்கள். இதன் பின்னர் சரிந்துவிட்டது பாஜகவின் எண்ணிக்கை.
அயோத்தியில் பாபர் மசூதியை இஸ்லாமியர்களிடம் இருந்து எடுத்துக் கொண்டனர்; அதேபோல இந்துக்களிடம் இருந்தும் 4,500 ஏக்கர் நிலத்தையும் எடுத்துக் கொண்டது உ.பி. அரசு. இந்த நிலங்கள் ஏழை விவசாயிகளுடையது. விமான நிலையம் கட்டுவதற்கும், சாலை வசதிகள் போடுவதற்கும் பணக்காரர்கள் தங்குவதற்கான 5 நட்சத்திர ஹோட்டல்களை கட்டுவதற்கும் இந்த நிலத்தை எடுத்துக் கொண்டனர். ஆனால் இதன் விளைவு என்ன? அயோத்தியில் கூட சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்தான் வெற்றி பெற்றார்.
ஆடு நனைகிறது என ஓநாய் அழுவதா?
இந்துக்கள்- முஸ்லிம்களிடையே வெறுப்பை உருவாக்க, வெறுப்பு அரசியலை உருவாக்க, பிரிவினை அரசியலை செய்தால் மட்டுமே பாஜக வெல்ல முடியும். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவதா? இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என பாஜக வருத்தப்படுகிறதா? இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து மசோதா கொண்டு வந்தது யார்? அமித்ஷாதானே. காஷ்மீர் மசோதாவை கொண்டு வந்தது அமித்ஷாதானே.. சிஏஏ மசோதாவை கொண்டுவந்தது அமித்ஷாதானே.. அப்போது, ஈழத் தமிழருக்காக நாங்கள் கேட்டோம்.. உங்கள் காதுகளில் விழவில்லை.
இன்றைக்கு வக்பு சொத்துகளை குறைந்த விலைக்கு கொடுப்பதாக பாஜக கவலைப்படுகிறது. உங்களுக்கு வந்தால் ரத்தம்; எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நீங்கள் ஏர் இந்தியாவை விற்பனை செய்தீர்களே? வெறும் ரூ16,000 கோடிக்கு ஏர் இந்தியாவை விற்பனை செய்துவிட்டு அதன் ரூ63,000 கோடி கடனை மத்திய அரசுதான் கட்டியது. உங்கள் நண்பர்களான, அதானி- அம்பானிகளுக்கு கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்திர்களே. அதுவும் ரூ4.5 லட்சம் கோடி கடன்களை அதிகாரப்பூர்வமாக தள்ளுபடி செய்தீர்களே?
தமிழ்நாட்டில் வக்பு வாரியத்துக்கு ஒரு பெண் தலைவராக இருந்திருக்கிறார். இப்போதும் வக்பு வாரியத்தில் 2 பெண்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அதில் ஒருவர் முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமதுவின் மகள். ஆக, நீங்கள் புதியதாக ஏதோ ஒன்றை செய்வது போல செய்கிறீர்களே? வரும் தேர்தலில் உ.பி.யில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கம். உ.பியில் வெற்றி பெற்றால்தான் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர முடியும். அதற்குதான் இந்த மசோதா. இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.