1. Home
  2. தமிழ்நாடு

அமித்ஷாவின் வழியில் முள்ளாக இருக்கும் ஒரே நபர் யோகி ஆதித்யநாத் மட்டுமே : கெஜ்ரிவால்..!

1

உ.பி மாநிலம் லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுடன், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால்கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால்பேசியதாவது:

”இன்டியா’ கூட்டணிக்கு வாக்கு கேட்டு உத்தர பிரதேசத்துக்கு வந்துள்ளேன். 4 முக்கிய தலைப்புகளின் கீழ் பேசவுள்ளேன். முதலாவது, இந்த தேர்தலில் அமித் ஷாவுக்காக மோடி வாக்கு சேகரிப்பது. இரண்டாவது யோகி ஆதித்யநாத் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார். மூன்றாவது, அரசியல் அமைப்பை பா.ஜ.க. மாற்றி எஸ்சி, எஸ்டி பிரிவுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முயற்சிப்பது. நான்காவது, ஜூன் 4-ஆம் தேதி இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வருவது.

அடுத்தாண்டு செப்டம்பர் 17-ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு 75 வயதாகிவிடும். அதன்பிறகு நாட்டின் பிரதமராக அமித் ஷாவுக்கு வழிவிட மோடி முடிவெடுத்துள்ளார். 75 வயதுடன் ஓய்வு பெற மாட்டேன் என்று பிரதமர் இதுவரை சொல்லவில்லை. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 220-க்கும் குறைவான இடங்களையே பெறும். ஹரியாணா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகம், மகாராஷ்டிரம், மேற்குவங்கம், உபி, பிகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை அவர்களில் வெற்றி வாய்ப்பு குறையும். பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்காது. இன்டியா கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறது.

பா.ஜ.க.வில் அமித் ஷாவுக்கு இடையூறாக இருந்த தலைவர்கள் வரிசையாக ஓரங்கட்டப்பட்டுள்ளனர். சிவராஜ் சிங் செளகான், வசுந்தரா ராஜே, டாக்டர் ராமன் சிங், தேவேந்திர சிங், மனோகர் கட்டார் ஆகியோர் ஒவ்வொருவராக ஓரங்கட்டப்பட்டனர். தற்போது அமித் ஷாவின் வழியில் முள்ளாக இருக்கும் ஒரே நபர் யோகி ஆதித்யநாத் மட்டுமே. ஆட்சி அமைத்தால் இரண்டு மாதங்களில் அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளனர்.” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.க. விதிமுறைப்படி, 75 வயதானால் பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்வால், கடந்த வாரம் இடைக்கால ஜாமீனில் வெளிவந்தார். உத்தரப் பிரதேசத்தில் வருகின்ற 20-ஆம் தேதி முக்கிய தொகுதிகளான ரேபரேலி, அமேதி உள்ளிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால்செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

Trending News

Latest News

You May Like