யோகா: செய்யவேண்டியவை.. செய்யக்கூடாதவை..
யோகா செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். கீழ்குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றி யோகா செய்தால் யோகாவின் பலனை முழுமையாக பெற முடியும்.
► யோகா செய்வதற்கு சிறந்த நேரம் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை. இது அதிகாலை நேரம் என்பதால் யோகாவின் பலன் முழுமையாக நமக்கு கிடைக்கும். யோகாவுக்கு மூச்சுப்பயிற்சி தான் பிராதனம் என்பதால் அதிகாலையில் நல்ல சுத்தமான காற்றை சுவாசிப்பதால் நமது உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.
► ஒரு வேளை காலையில் யோகா செய்ய முடியாதவர்கள் மாலை 6 மணி முதல் 8 மணி வரையில் செய்யலாம்.
► யோகா செய்யும் இடம் மிகவும் அமைதியாக இருத்தல் வேண்டும். மரங்கள், செடி, கொடிகள், நீர்நிலைகள் உள்ள இடங்களில் செய்வது மனதிற்கு மேலும் மன அமைதியைத் தரும்.
► மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிந்து கொண்டு யோகா செய்யக்கூடாது. யோகா செய்யும் போது உடல் அசைவுகள் ஏற்படுவதால் தளர்வான ஆடைகளை அணிவதே நல்லது.
► யோகா செய்யும் போது மூச்சை நாம் நன்றாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். அப்படி வெளிவிடும் போது மூக்கின் வழியாக மட்டுமே மூச்சை வெளிவிடவேண்டும். வாயின் வழியாக வெளியிடக்கூடாது.
► காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் யோகா செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியாதவர்கள் சிறிது பால் அல்லது பழச்சாறு அருந்திவிட்டு யோகா செய்யலாம்.
► யோகாவை மிகவும் அவசரம் அவசரமாக செய்யக்கூடாது. பொறுமையுடனும், நிதானத்துடனும் படிப்படியாக யோகாசனங்களை செய்ய வேண்டும்.
► அதேபோன்று யோகா பயிற்சி ஆரம்பித்த உடனேயே அனைத்து வகை ஆசனங்களையும் செய்யக்கூடாது. முதலில் எளிதான ஆசனங்களை செய்து விட்டு, அதன்பின்னர் படிப்படியாக, சற்று கடினமான ஆசனங்களை செய்ய வேண்டும்.
► பெண்கள் மாதவிடாய் காலங்களில் யோகாசனம் செய்யக்கூடாது . அதே போன்று கர்ப்பிணிகள் பேறு காலத்திற்கு பின்னர் சற்று இடைவெளி விட்டு யோகாசனம் செய்வது நல்லது. அதேபோன்று கர்ப்பிணிகள் அவர்களுக்கேற்றவாறு, அதாவது சுகப்பிரசவத்திற்கென இருக்கும் ஆசனங்களை செய்ய வேண்டும். அனைத்து ஆசனங்களையும் செய்யக்கூடாது.
► அதேபோன்று வயதானவர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு, எளிதான ஆசனங்களை செய்வது நலம்.
► ஒவ்வொரு ஆசனங்களுக்கு இடையே 15 முதல் 20 வினாடிகள் ஓய்வு எடுக்க வேண்டும். சீரான இடைவெளி இருக்க வேண்டும். அதே நேரத்தில் அதிகமாக நேரம் ஓய்வு எடுக்கக்கூடாது.
► தரையில் அமர்ந்து ஆசனங்களை செய்யக்கூடாது. காட்டன் போர்வைகள் கொண்டு செய்வது உடலுக்கு நல்லது.
► மூடிய அறையில் ஒருபோதும் ஆசனம் செய்யக்கூடாது. வீட்டின் பால்கனி, மொட்டை மாடி போன்ற திறந்தவெளியில் காற்று நன்றாக வரும் இடத்தில் யோகா செய்ய வேண்டும்.
newstm.in