மத்திய அரசு மீது எக்ஸ் நிறுவனம் வழக்கு..!

எலான் மஸ்க்குக்குச் சொந்தமான சமூக ஊடக நிறுவனமான ‘எக்ஸ்’, மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தொடர்ந்துள்ள வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய பாதுகாப்பு, இறையாண்மை அல்லது பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை பொதுமக்கள் அணுகுவதை அரசு தடுக்க தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69A வழி வகுக்கிறது. இருப்பினும், இது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன் உரிய மறு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என சட்டம் கோருகிறது. இந்த மறு ஆய்வுக்கான விதிகளை 2009 தகவல் தொழில்நுட்ப விதிகள் வரையறுத்துள்ளது.
எனவே, டிஜிட்டல் உள்ளடக்கம் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69A-வை பின்பற்ற வேண்டும். இந்த சட்டப்பிரிவின்படியே நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், உள்ளடக்கம் தொடர்பாக அரசு தன்னிச்சையாக அறிவிப்புகளை வெளியிட, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் (I&B) சட்டப் பிரிவு 79(3)(b) பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டப் பிரிவு, நீதிமன்ற உத்தரவு அல்லது அரசு அறிவிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆன்லைன் தளங்கள் சட்டவிரோத உள்ளடக்கத்தை அகற்ற வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
சட்டப் பிரிவு 79(3)(b), சட்டப் பிரிவு 69A-க்கு முரணாக உள்ளது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறுவதாகவும், ஆன்லைனில் சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்தை மட்டுப்படுத்துவதாகவும் உள்ளது. பிரிவு 69A-வில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட சட்ட செயல்முறையைத் தவிர்த்து, அரசு 79(3)(b) சட்டப் பிரிவைப் பயன்படுத்துகிறது.
சட்டப் பிரிவு 79(3)(b)-ன்படி, ஒரு தளம் 36 மணி நேரத்துக்குள் அரசின் அறிவிப்புக்கு இணங்கத் தவறினால், பிரிவு 79(1) இன் கீழ் அது தனக்கு இருக்கும் சட்ட பாதுகாப்பை இழக்க நேரிடும். மேலும், இந்திய தண்டனைச் சட்டம் (IPC) உட்பட பல்வேறு சட்டங்களின் கீழ் பொறுப்பேற்க நேரிடும். இந்த அச்சுறுத்தல்கள், பிரிவு 69A-க்கு எதிரானவை.
உள்ளடக்கத்தைத் தடுக்க அரசுக்கு தன்னிச்சையான அதிகாரத்தை பிரிவு 69A வழங்கவில்லை. உரிய நடைமுறைகளைப் பின்பற்றப்பட வேண்டியதை அது கட்டாயப்படுத்துகிறது. ஆனால், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையான தணிக்கையை விதிக்க அதிகாரிகள் 79(3)(b) பிரிவை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
பிரிவு 79(3)(b) ஐ அரசு ஒரு குறுக்கு வழியாகப் பயன்படுத்துகிறது. இதனால் உரிய ஆய்வு இல்லாமல் உள்ளடக்கத்தை அகற்ற அனுமதிக்கப்படுகிறது. தன்னிச்சையான தணிக்கையைத் தடுக்கும் சட்டப் பாதுகாப்புகளை பிரிவு 79(3)(b) நேரடியாக மீறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.