1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவியை தலித்னு சொல்வீங்களா.. சீறிய ஜான் பாண்டியன்..!

1

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகின. இதில் மாநில அளவில் 3 பேர் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த காவ்ய ஜனனி என்ற மாணவியும் ஒருவர். 

இதனிடையே, ஆங்கில நாளிதழ் ஒன்று இதுதொடர்பாக வெளியிட்ட செய்தியில், தலித் மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்றதாக குறிப்பிட்டு இருந்தது. இதற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "10-ம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த செய்தியை ஆங்கில நாளிதழ் ஒன்றில் படித்தேன். அதில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்ற ராமநாதபுரம் மாணவி காவ்ய ஜனனியை தலித் என்று குறிப்பிட்டுள்ளனர் இதனால் நான் கடும் மனவேதனை அடைந்தேன்.

தனது திறமையாலும், கடின உழைப்பாலும் வெற்றி பெற்ற அந்த மாணவியை தலித் என்று அந்த செய்தியில் அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? மாநில மற்றும் மத்திய அரசு துறை சார்ந்த பணிகளில் உள்ள பட்டியல் சாதியினரை தலித் என்று குறிப்பிட வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 1982-ம் ஆண்டு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. இந்த செய்தி இன்றும் ஆவணமாக உள்ளது. மேலும் பல பத்திரிகைகளிலும் இது வெளிவந்தது.

ஆனால், அதே பத்திரிகை நிறுவனத்தின் ஆங்கில பத்திரிகையில் இன்றும் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். தேவேந்திர குல வேளாளர்களை தலித் என்ற வார்த்தையின் மூலம் அடையாளப்படுத்தும் வன்மம் இன்னும் தொடர்கிறது. தேவேந்திர குல வேளாளர்கள் இதை விரும்புவதில்லை என்பது தெரிந்திருந்தும், அந்த வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

மேலும், குறிப்பிட்ட அந்த ஆங்கில பத்திரிக்கை, ஒரு வகை வன்மத்தோடு செயல்படுகின்றதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்தப் போக்கை அந்த பத்திரிகை நிறுவனம் நிறுத்த வேண்டும். மேலும் இது தொடர்ந்தால், சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என்பதை மிகக் கண்டிப்போடு தெரிவித்துக் கொள்கிறேன்" என ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like