1. Home
  2. தமிழ்நாடு

உலகின் மிக உயரமான காஷ்மீரின் செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் வெற்றி!

1

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை ஜம்முவுடன் இணைக்கும் வகையில் உதம்பூர்- ஸ்ரீநகர்- பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டம் கடந்த 1999-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் ரியாசி- சங்கல்தான் இடையே செனாப் ஆற்றில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் கட்டப்பட்டு உள்ளது. செனாப் ரயில்வே பாலத்தின் உயரம் 359 மீட்டர் ஆகும். நீளம் 1.3 கி.மீ. ஆகும். இந்த பாலத்தில் 100 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க முடியும். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்த பிறகு வரும் பிப்ரவரி மாதத்தில் உதம்பூர்- ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

இந்த சூழலில் புதிய வழித்தடத்தில் வந்தே பாரத் சொகுசு ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது. இதன்படி கடந்த 24-ம் தேதி தலைநகர் டெல்லியில் இருந்து சிறப்பு வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் அன்றைய தினம் பிற்பகலில் ஜம்முவை சென்றடைந்தது. இதன்பிறகு நேற்று காலை ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலத்தை ரயில் வெற்றிகரமாக கடந்து சென்றது.

இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறுகையில், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சாலை வழியாக செல்ல குறைந்தபட்சம் 8 மணி நேரம் ஆகிறது. புதிய ரயில் வழித்தடத்தில் ஜம்முவில் இருந்து 3 மணி நேரத்தில் ஸ்ரீநகரை சென்றடையலாம் என்றனர்.


 


 

Trending News

Latest News

You May Like